குவாஹாட்டி: அசாமில் தற்போது ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், கடந்த மாதம் மொரிகான் மாவட்டம் மொய்ராபாரி பகுதியைச் சேர்ந்தவர் முப்தி முஸ்தபா. இவர் அல்காய்தா தீவிரவாத அமைப்புடன் பணப்பரிமாற்றம் செய்ததுடன் சிலருக்கு மதரஸாவில் அடைக்கலம் கொடுத்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவருக்குச் சொந்தமான மதரஸா இடிக்கப்பட்டது. இந்நிலையில், பர்பேட்டா மாவட்டத்தில் மற்றொரு மதரஸா நேற்று முன்தினம் இடிக்கப்பட்டது. இதுதொடர்பாக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறும்போது, “அல்காய்தா தீவிரவாதிகளின் மையமாக மதரஸாக்கள் உள்ளதாலேயே அவை இடிக்கப்பட்டன. இஸ்லாமிய அடிப்படை வாதிகளின் மையமாக அசாம் மாறி வருகிறது என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது” என்றார்.
இதுகுறித்து அசாம் கூடுதல் போலீஸ் டிஜிபி (சிறப்பு) ஹிரேன் நாத் கூறும்போது, ‘‘மதரஸாவை வங்கதேசத்தைச் சேர்ந்த சைபுல் இஸ்லாம் என்பவர் நடத்தி வந்துள்ளார். அவர் அன்சருல்லா பங்களா டீம் (ஏபிடி) என்ற தீவிரவாத அமைப்பை நடத்தி வந்ததும், அது இந்தியாவில் தடை செய்யப்பட்ட அல்காய்தா அமைப்புடன் தொடர்பில் உள்ளதும் தெரியவந்துள்ளது’’ என்றார்.