அண்ணாமலை பதவிக்கு ஆபத்து; முன்னாள்.. இன்னாள் வெட்டிய குழி!

தமிழ்நாடு பாஜக தலைவராக இருப்பவர் அண்ணாமலை. கரூர் மாவட்டத்தை சேர்ந்த அண்ணாமலை கர்நாடகா மாநில காவல் துறையில் எஸ்.பியாக பணியாற்றி வந்தார்.

அப்போது அந்த மாநிலத்தில் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது அண்ணாமலை எடுத்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் குறுகிய காலத்தில் பிரபலம் அடைய செய்தது.

இதன் காரணமாக, ஐ.பி.எஸ் அதிகாரியான அண்ணாமலையை ஏறக்குறைய கர்நாடகாவின் சிங்கம் என மக்கள் அழைக்கத்தொடங்கியதால் பலவேறு தரப்பில் இருந்து அண்ணாமலைக்கு ஆதரவு பெருகியது.

இந்நிலையில் யாருமே எதிர்பாராத வகையில், அண்ணாமலை தனது ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சொந்த ஊர் திரும்பினார். அப்போது பாஜகவில் அண்ணாமலை சேரப்போவதாக பேசப்பட்டது.

இதனை மெய்pபிக்கும் விதமாக அண்ணாமலை பாஜகவில் இணைந்து ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் ஷாக் கொடுத்தார். கட்சியில் சேர்ந்த அண்ணாமலைக்கு எடுத்ததுமே மாநில துணை தலைவர் பதவி வழங்கப்பட்டதால் மூத்த நிர்வாகிகள் அதிருப்திக்கு உள்ளாகினர்.

இதற்கிடையே அப்போது பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றதால் கட்சியின் மாநிலத்தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார்.

இந்த நியமனம் பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு மூத்த நிர்வாகிகளான எச்.ராஜா, வானதி சீனிவாசன் போன்றவர்கள் மத்தியில் சலசலப்பையும் ஏற்படுத்தியது.

ஆனாலும், இது தேசிய தலைமையின் உத்தரவு என்பதால் நாளடைவில் மாநில தலைவர் அண்ணாமலைக்கு பாஜக மூத்த நிர்வாகிகள் உள்பட அனைத்து தரப்பினர் மத்தியில் ஒத்துழைப்பு கிடைக்க தொடங்கியது.

இதன் பிறகு பாஜக வட்டாரத்தில் அண்ணாமலை கதாநாயகனாக கொண்டாடப்பட்டார். இதை தனக்கு சாதகமாக்கிய அண்ணாமலை ஆளும் திமுக அரசாங்கத்தை வம்பு இழுக்க தொடங்கினார்.

அண்ணாமலை குற்றச்சாட்டுகள் மற்றும் விமர்சனங்களுக்கு உடனுக்குடன் தமிழக அமைச்சர்கள் பதிலளித்ததால் பாஜகவே எதிர்க்கட்சி என்பது போன்ற தோற்றம் தமிழக அரசியலில் காணப்பட்டது.

இந்த நிலையில் கே.டி.ராகவன் பூஜை அறையில் இருந்த பலான வீடியோ ஒன்று வெளியாகி, பாஜகவின் ஒட்டுமொத்த இமேஜையும் சுக்குநூறாக நொறுக்கியது. இந்த விவகாரத்தில் அண்ணாமலை பின்னணியில் இருந்ததாக பாஜகவை சேர்ந்த மதன் ரவிச்சந்திரனே போட்டு உடைத்தார்.

இது, மாநில தலைவர் அண்ணாமலைக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என பெரிதும் பாஜக தொண்டர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் எதிர்பார்த்தனர். ஆனாலும் அண்ணாமலை மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் மிகுந்த உற்சாகம் அடைந்த அண்ணாமலை வழக்கம் போல் தனக்கே உரிய ஸ்டைலில் குற்றச்சாட்டுகளை அடுக்கிக்கொண்டு தமிழக அரசியலை தெறிக்க விட்டுக்கொண்டு இருந்தார்.

தன்னுடைய அதிரடி பேச்சு, நடவடிக்கைகளால் பாஜக வட்டாரமே பொறாமைப்படும் அளவுக்கு அசுர வளர்ச்சியை நோக்கி அண்ணாமலை நகர்ந்தார். இந்த நிலையில் சமீபத்தில் மதுரை வந்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் செருப்பு வீசினர்.

இந்த செருப்பு வீச்சு சம்பவம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதில் தொடர்புள்ளவர்கள் யாராக இருந்தாலும் சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கலாம் என அண்ணாமலை அறிவித்தார்.

செருப்பு வீசியவர்கள் பாஜகவினர் என தெரிந்தும்கூட சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக போலீசாருக்கு அண்ணாமலை கோரிக்கை விடுத்தது, கட்சிக்குள் கொந்தளிப்பையே ஏற்படுத்தியது.

இந்நிலையில் யாருமே எதிர்பாராத வகையில் அமைச்சர் பிடிஆர் கார் மீது செருப்பு வீசப்பட்ட விவகாரம் தொடர்பான ஒரு ஆடியோ வெளியாகி அண்ணாமலையின் முகத்திரையை கிழித்து தொங்கப்போட்டுள்ளது.

அந்த ஆடியோவில்,‘இதை எப்படி அரசியல் செய்யலாம் என பார்க்கிறேன்’ என அண்ணாமலை பேசுவதுபோல் பதிவாகி உள்ளது. இதன் மூலம் அமைச்சர் கார் மீது திட்டமிட்டு செருப்பு வீசியது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தால் தமிழக அரசியலில் பாஜகவுக்கு என, இருந்த கொஞ்ச செல்வாக்கையும் அண்ணாமலை சீர்குலைத்துவிட்டார் என மூத்த நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கி வருவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.

இதன் தொடர்ச்சியாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கண்காணிக்க ஒரு குழுவை தேசிய தலைமை அமைத்துள்ளதாகவும், இதற்கு பின்னால் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் தற்போதைய அமைச்சர் எல்.முருகன் உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் விரைவில் அண்ணாமலை பதவி காலி ஆகலாம் என பாஜக வட்டாரத்திலேயே பேச்சு அடிபடுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.