அரசின் உத்தரவுகள் காற்றில் பறக்க விடப்படுகிறதா..? மக்கள் நீதி மய்யம் கேள்வி..!

அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளே வகுப்பறைகளை கூட்டி சுத்தம் செய்து, குப்பையை அகற்றும் வீடியோ ஊடகங்களில் வெளியாகி உள்ளது. இதை கண்டித்து மக்கள் நீதி மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. நெல்லை மாவட்டம் நாங்குநேரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளே வகுப்பறைகளை கூட்டி சுத்தம் செய்து, குப்பையை அகற்றும் வீடியோ ஊடகங்களில் வைரலானது.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளை துப்புரவுப் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், நெல்லை மாவட்டம் நாங்குநேரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளே வகுப்பறைகளை கூட்டி சுத்தம் செய்து, குப்பையை அகற்றும் வீடியோ ஊடகங்களில் வெளியாகி உள்ளது. மேலும், பள்ளியில் விளையாட்டு மைதானம், ஆய்வகம், கழிப்பறை வசதி இல்லை, சுற்றிலும் செடி, புதர்கள் சூழ்ந்திருப்பதால் வகுப்புக்குள் பாம்புகள் நுழைகின்றன என்றெல்லாம் மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதேபோல, தமிழகத்தில் ஏராளமான பள்ளிகளில் அடிப்படை வசதிகளின்றி மாணவர்கள் தவிக்கின்றனர்.

கல்வித் துறையில் தமிழகம் சிறந்து விளங்குவதாக முதல்வர் பெருமைபட்டுக் கொள்கிறார். ஆனால், அரசுப் பள்ளிகளின் நிலைமைக்கு நாங்குநேரி பள்ளி சிறு உதாரணம்தான். எனவே, பணியாளர் நியமனம் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.