மதுரை: விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் எந்தவொரு அரசியல்கட்சி அல்லது மதம், சமூகம் அல்லது ஜாதியை குறிப்பிடும் விதத்தில் பாடல்களோ அல்லது நடனமோ இருக்கக்கூடாது. ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ஆபாச நடனமோ அல்லது அநாகரீகமான உரையாடல்களோ இருக்கக்கூடாது என்பது உள்ளிட்ட பல நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி, ஐகோர்ட் கிளை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு, விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், வைக்கப்பட்டுள்ள சிலைகளை ஊர்வலமாக எடுத்து நீர்நிலைகளில் கரைப்பது மற்றும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆடல்-பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கோரி ஐகோர்ட் மதுரை கிளையில், மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுக்களை விசாரணை செய்த நீதிபதி முரளிசங்கர், பல்வேறு நிபந்தனைகளுடன் அனைத்து மனுக்களுக்கும் அனுமதி வழங்கி பிறப்பித்த உத்தரவு விவரம்:
*ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ஆபாச நடனமோ அல்லது அநாகரீகமான உரையாடல்களோ இருக்கக்கூடாது.
*எந்தவொரு அரசியல்கட்சி அல்லது மதம், சமூகம் அல்லது ஜாதியை குறிப்பிடும் விதத்தில் பாடல்களோ அல்லது நடனமோ இருக்கக்கூடாது.
*எந்த அரசியல்கட்சி அல்லது மதத்துக்கும் ஆதரவாக எதிராகவோ பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்
கூடாது.
*இந்த விழா மதம் அல்லது மதநல்லிணக்கத்தை பாதிக்காமல் இருக்க வேண்டும்.
*ஜாதி அடிப்படையில் எந்த பாகுபாடும் இருக்கக்கூடாது.
*நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் குட்கா பொருட்களையோ, மதுபானத்தையோ உட்கொள்ளக்கூடாது.
*குறிப்பாக பொது மக்களுக்கு அல்லது போக்குவரத்திற்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தக்கூடாது.
*நிபந்தனைகளை மீறி ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், வழக்கு தாக்கல் செய்தவர்களும், விழா ஏற்பாட்டாளர்களும் அதற்குப் பொறுப்பாவார்கள். நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை மீறினால், ஆடல், பாடல் நிகழ்ச்சியை நிறுத்தலாம். மேலும் சம்பந்தப்பட்ட காவல்துறை முழு சுதந்திரத்துடன் சட்டப்படி தேவையான நடவடிக்கை எடுக்கலாம். இவ்வாறு கடுமையான நிபந்தனைகளை நீதிபதி விதித்து, ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.
*அசம்பாவிதம் நடந்தால் விழா ஏற்பாட்டாளர்களே பொறுப்பு
விநாயகர் சிலை ஊர்வல நிகழ்ச்சிகள் மதம் அல்லது மதநல்லிணக்கத்தை பாதிக்காமல் இருக்க வேண்டும், ஜாதி அடிப்படையில் எந்த பாகுபாடும் இருக்கக்கூடாது, நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் குட்கா பொருட்களையோ, மதுபானத்தையோ உட்கொள்ளக்கூடாது, பொதுமக்களுக்கு அல்லது போக்குவரத்திற்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தக்கூடாது, நிபந்தனைகளை மீறி ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், வழக்கு தாக்கல் செய்தவர்களும், விழா ஏற்பாட்டாளர்களும் அதற்குப் பொறுப்பாவார்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை உயர்நீதிமன்றம் விதித்துள்ளது.