ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சி நகரைச் சேர்ந்தவர் அங்கிதா (19). இவர் அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவரை அதே பகுதியைச் சேர்ந்த ஷாருக் கான் என்பவர் அடிக்கடி காதலின் பேரில் பள்ளிக்குச் செல்லும்போது தொல்லைச் செய்துள்ளார். இது குறித்து அங்கீதா அவரின் தந்தையிடமும் புகார் செய்துள்ளார்.
இந்த நிலையில், அங்கிதா காதலை மறுத்ததன் காரணமாக ஷாருக் கான் அவருடைய நண்பர் நயீம் அலியாஸ் சோட்டுக்கான் என்பவருடன் சேர்ந்து, கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி அங்கிதாவின் வீட்டுக்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்துள்ளார். பின்னர், அறையின் ஜன்னல் பக்கமாக தூங்கிக் கொண்டிருந்த அங்கிதாவின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி, தீ வைத்திருக்கிறார்.
90 சதவிகிதம் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அங்கிதா பூலோ ஜானு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ராஞ்சியில் ராஜேந்திரா மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, ஷாருக் கான், சோட்டு இருவரையும் ஜார்க்கண்ட் போலீஸார் கைதுசெய்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்தபடி காவல்துறையிடம் அங்கிதா கொடுத்த வாக்குமூலத்தில், “இந்தச் சம்பவம் நடந்த அன்று, காலை 4 மணி அளவில் ஷாருக் கான், சோட்டு இருவரும் மண்ணெண்ணெய் கேனுடன் வீட்டு பக்கம் வந்தனர். ஜன்னல் பக்கமாக தூங்கிக் கொண்டிருந்த என்மீது மண்ணெண்ணெய் ஊற்றி, உயிருடன் கொளுத்தினர். அவன் என்னை சாக விட்டுவிட்டான்; அவனும் சாக வேண்டும் என்று விரும்புகிறேன்“ என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் அங்கிதா கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சட்ட ஒழுங்கை பாதுகாக்க குற்றவியல் நடைமுறை சட்டம் 144-ஐ, இந்தச் சம்பவம் நடந்த பகுதியில் அமல்படுத்தியிருக்கிறது. மேலும், இந்த வழக்கை காவல் கண்காணிப்பாளர் எம்.எல்.மீனா தலைமையில், சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.
ஆகஸ்ட் 23-ம் தேதி அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஜார்க்கண்ட் போலீஸார் ஷாருக் கானை கைதுசெய்து போலீஸ் ஜீப்புக்கு அழைத்துச் செல்லும்போது, ஷாருக் கான் சிரித்துக் கொண்டு நடப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மாணவியின் மரணத்துக்கு நீதிகேட்டு அந்தப் பகுதியில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.