ஜார்க்கண்ட் மாநிலத்தில், வேண்டுமென்றே மதிப்பெண்களை குறைவாக வழங்கியதாகக் கூறி, ஆசிரியர்களை, மாணவர்கள் மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில், முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தலைமையிலான, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தின் தும்கா மாவட்டத்தைச் சேர்ந்த கோபிகந்தம் கிராமத்தில் செயல்பட்டு வந்த பள்ளி ஒன்றில், சமீபத்தில் தேர்வு நடைபெற்று உள்ளது.
அதில், செய்முறைத் தேர்வில் ஆசிரியர்கள் குறைவான மதிப்பெண்களை வழங்கியதால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். ஆனால், அதற்கு சரியாக பதில் அளிக்காததால் குறிப்பிட்ட பாட ஆசிரியர்களை மரத்தில் கட்டி வைத்து தாக்கி உள்ளனர். மேலும், தேர்வில் தோல்வி பெற வேண்டும் என்பதற்காகவே, ஆசிரியர்கள் குறைவான மதிப்பெண்கள் வழங்கியதாகவும் அந்த மாணவர்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.
ஆசிரியர்களை மரத்தில் கட்டி வைத்து மாணவர்கள் தாக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில், மேலும் பல பள்ளி மாணவர்கள், தங்கள் ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்குவதையும் காணலாம். இதற்கிடையே, அந்த மாணவர்கள் உண்மையில் தேர்வில் தேர்ச்சி பெற தகுதியானவர்களா அல்லது ஆசிரியர்கள் வேண்டுமென்றே அவர்களைத் தோல்வி அடையச் செய்தனரா என்ற தகவல் தெரிய வரவில்லை.
பாதிக்கப்பட்ட ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:
மாணவர்கள் கூட்டம் நடத்துவதாகக் கூறி எங்களை அழைத்து சென்று மதிப்பெண்கள் குறைந்து விட்டதாகக் கூறினர். மாணவர்களின் செய்முறைத் தேர்வு மதிப்பெண்கள் முடிவுகளில் சேர்க்கப்படாததால் இது நடந்தது. அதை தலைமை ஆசிரியர் தான் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து, தும்கா மாவட்டம், கோபிகந்தர் தொகுதிக் கல்வி விரிவாக்க அலுவலர் சுரேந்திர ஹெப்ராம் கூறியதாவது:
இந்த சம்பவம் குறித்த தகவலைப் பெற்ற உடனே, அனைத்து ஆசிரியர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தினோம். மாணவர்களிடம் விசாரித்த போது, செய்முறைத் தேர்வில் தங்களுக்கு மிகக் குறைவான மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாகவும், ஆசிரியர்களிடமிருந்து போதுமான பதில் கிடைக்கவில்லை என்றும் கூறினர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.