ஆட்சி கலைகிறதா? செப்.,3ல் காத்திருக்கும் பரபரப்பு… தட்டி தூக்கப் போகும் கே.சி.ஆர்!

தெலங்கானா மாநிலத்தில் முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிர சமிதியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலம் உருவான 2014ல் இருந்து தற்போது வரை சந்திரசேகர ராவ் தான் முதல்வராக இருக்கிறார். கடந்த 2018 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக திடீரென பதவி விலகிய கே.சி.ஆர், ஆட்சி கலைப்பிற்கு வித்திட்டார். இதையடுத்து நடந்த தேர்தலில் 46.9 சதவீத வாக்குகளுடன் மக்களின் பேராதரவை பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தார்.

இதுவொரு தேர்தல் யுக்தி என்று பேசப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை ஒட்டி இத்தகைய நிகழ்வுகள் அரங்கேறுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் வரும் செப்டம்பர் 3ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் மற்றும் கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. அன்றைய தினம் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

ஆனால் இதற்கு தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். தற்போதைய சூழலில் மக்களின் ஆதரவு எங்களுக்கு தான் இருக்கிறது. அதேசமயம் பாஜகவை எதிர்த்து தீவிர அரசியல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆனது தொடர்ச்சியாக தெலங்கானா அரசை குறிவைத்து தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

நிலுவையில் உள்ள மின் கட்டணத்தை 30 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. NREGP நிதிப் பயன்பாட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பை அனுப்பி வைத்து விசாரணை நடத்த முயற்சிக்கிறது. இவ்வாறு மாநில அரசுக்கு முட்டுக்கட்டை போடும் பல்வேறு விஷயங்களை பாஜக செய்து வருகிறது. இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கவே கே.சி.ஆர் வியூகம் வகுத்துள்ளார்.

அதற்காக தான் செப்டம்பர் 3ஆம் தேதி அமைச்சரவை மற்றும் கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் மாநில வளர்ச்சியில் மத்திய அரசு போடும் முட்டுக்கட்டைகள் என்னென்ன? மத்திய பாஜக அரசின் கொள்கைகள் எந்த அளவிற்கு நாட்டிற்கு ஆபத்தாக இருக்கின்றன? இவற்றை மாநில அளவில் எப்படி எதிர்கொள்வது?

தேசிய அளவில் பாஜகவிற்கு எதிரான சக்திகளை எப்படி ஒன்றிணைப்பது? உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக தேர்தல் நேரத்திற்கு முன்பாக ஆட்சியை கலைக்க வாய்ப்பே இல்லை. ஏனெனில் கடந்த முறை மத்திய அரசுக்கும், தெலங்கானா அரசுக்கும் இருந்த உறவு வேறு.

இம்முறை களநிலவரம் அப்படியில்லை. எனவே ரிஸ்க் எடுக்க கே.சி.ஆர் விரும்பவில்லை. அதற்கு பதிலாக பாஜகவிற்கு எதிரான அரசியல் செயல்பாடுகளில் தீவிரம் காட்டுவார் என்கின்றனர். 2023ல் தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தலும், 2024ல் மக்களவை தேர்தலும் வரவுள்ளது. இதையொட்டி தெலங்கானா ராஷ்டிர சமிதி யார் பக்கம் நிற்கப் போகிறது? இதற்கான அரசியல் வியூகம் என்ன? என பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.