ஒரு திரைப்படத்திற்கு பின்னணி இசை என்பது அந்தப் படத்தின் ஆன்மாவை தாங்கிபிடித்து அதன் எல்லாவிதமான உணர்வுகளையும் கொஞ்சமும் குலையாமல் பார்வையாளருக்கு கடத்தி செல்வதாகும். அந்த அளவிற்கு பின்னணி இசையானது ஒரு நல்ல படத்திற்கு முக்கியமானது. பின்னணி இசையின் முக்கியத்துவத்தை இயக்குநர் பாரதிராஜாவின் வார்த்தைகளிலேயே நாம் புரிந்து கொள்ளலாம்.
பாரதிராஜா கொடுத்த வெற்றிப் படங்களில் முதன்மையான படம் என்றால் அது ’முதல் மரியாதை’தான். முதல் மரியாதை படம் குறித்து பேட்டி ஒன்றில் பாரதிராஜா பேசிக் கொண்டிருக்கையில் குறிப்பிட்ட ஒரு காட்சியை பின்னணி இசை கோர்வைக்கு முன்னும் பின்னும் எப்படி இருந்தது என்று விளக்கி இருப்பார். பின்னணி இசையால் அந்த காட்சியினை மிக உச்சமான இடத்திற்கு கொண்டு சென்றிருப்பார் இசைஞானி இளையராஜா. புல்லாங்குழலை வைத்து மேஜிக் செய்திருப்பார். ஆம், ஒரு காட்சிக்கு உயிர் போன்றது அதன் பின்னணி.
தமிழ் சினிமாவில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிறகு எத்தனையோ இசையமைப்பாளர்கள் வந்திருந்தாலும் பின்னணி இசையில் முத்திரை பதித்தவர்கள் சொற்பமானவர்களே. அதில் பின்னணி இசையில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி வைத்திருப்பவர் யுவன் சங்கர் ராஜா. ஒரு போதும் இளையராஜா உடன் ஒப்பிட முடியாது என்றாலும், யுவன் செய்துள்ள சில மிராக்கள் பின்னணி இசைகள் காலத்தை கடந்து நிற்கும். எத்தனையோ இரவுகளில் ரசிகர்களில் இதயங்களை தன்னுடைய பாடல்களால் மட்டுமல்லாமல் பின்னணி இசையாலும் தாலாட்டியுள்ளார் யுவன்.
இன்றளவும் 7ஜி ரெயின் போ காலணி படத்தின் தீம் மியூசிக்கை கேட்டால், அப்படி உடம்பெல்லாம் சிலிர்த்து போதும். அந்த பெண் குரல்களில் கோரஸ் நம்மை ஏதேதேதோ செய்துவிடுகிறது. அந்தக் காட்சியில் ஹீரோ எப்படி மழையில் நனைந்து போவாரோ அதேபோல் நாமும் யுவனின் இசை மழையில் நனைந்து கரைந்துவிடுவோம். தமிழில் யுவனின் பின்னணி இசை குறித்து பேச எத்தனையோ இருந்தாலும் வேறொரு மொழிப் படம் ஒன்றினை எடுத்துக்காட்டாக இங்கே பார்க்கலாம்.
சித்தார்த் நடிப்பில் தெலுங்கில் 2009-ல் வெளியான ’ஓய்’ படத்தில் அற்புதமான இரண்டு காதல் காட்சிகள் இருக்கும். தொடக்கத்தில் வரும் காட்சியில் சித்தார்த் தன்னுடைய காதலியிடம் அவளது பிறந்தநாளில் நள்ளிரவில் தன்னுடைய காதலை வெளிப்படுத்துவார். ஒரு வருடத்தின் 12 மாதங்களை கணக்கில் கொண்டு 12 கிப்ட்களை கொடுப்பார்.
முதலில் ஹேப்பி பர்த் டே என்று சொன்ன அந்த நொடியில் இருந்து பின்னணியில் காதல் ததும்பும் புத்துணர்ச்சிமிக்க இசை ஆர்ப்பரிக்கும். அந்த பின்னணி இசை காதலியிடம் காதலை சொல்லும்போது எப்படி ஒரு காதலனின் மனநிலை சந்தோஷத்தின் உச்சத்தில் துள்ளி குதித்துக் கொண்டிருக்குமோ அப்படியொரு உணர்வை நம்மையும் ஆட்கொள்ள வைத்துவிடும். கிட்டத்தட்ட 4 நிமிடங்களுக்கு மேல் அந்த காட்சி இருக்கும்.
அந்த காட்சியில் இறுதியில் 11 கிப்ட்டுகளை கொடுத்த பின் நான் தான் அந்த பன்னிரெண்டாவது கிப்ட் ‘ஐ லவ் யூ’ என சித்தார்த் சொல்லும் போது பின்னணி இசை வெள்ளம்போல் பாய்ந்து ஓடி ஒரு முடிவுக்கு வரும். இதேபோல் படத்தின் க்ளைமேக்ஸில் சித்தார்த்தின் பிறந்தாளில் அவரது காதலி 12 கிப்ட்களை கொடுத்து வாழ்த்து தெரிவிப்பார்.
சித்தார்த் காதலை சொல்லும் போதும் இருந்த அதே பின்னணி இசையை சற்றே மாற்றி அதன் துள்ளல் உணர்வுகளுக்கு பதிலாக சோகத்தை நிரப்பி இருப்பார். இரண்டு காட்சிகளும் யுவனின் பின்னணி இசையால் அப்படி தூக்கி நிறுத்தப்பட்டிருக்கும். இந்த பின்னணி இசை தமிழியில் வெளியான தீபாவளி படத்தில் பயன்படுத்தப்பட்டதுதான். அந்தப் படத்தில் பாடல்கள் பேசப்பட்ட அளவிற்கு பின்னணி இசை பேசப்படவில்லை. ஆனால், இந்தப் படத்தில் அதே பின்னணி இசை மிகவும் பொருத்தமாக காட்சிகளை தாங்கிப் பிடித்திருக்கும்.
யுவனின் பின்னணி இசை குறித்து இயக்குநர்கள் பலரும் சிலாகித்தி பேசியிருக்கிறார்கள். இயக்குநர் ராம் ஒரு பேட்டியில் அழகாக கூறியிருப்பார். ‘தமிழ் சினிமாவில் நிறைய டெக்னீஷியன்கள் இருக்கிறார்கள். ஆனால், கம்போஸர்கள் சொற்பமானவர்கள். யுவன் ஒரு கம்போஸர். இசையை உருவாக்கக் கூடியவர். ஒரு கவிஞர் கவிதையை படைப்பதை போல’ என்று கூறியிருப்பார். யுவனின் பின்னணி இசையை இரண்டு வகையில் புரிந்து கொள்ளலாம். புதுப்பேட்டை, ஆரண்ய காண்டம் போன்ற கல்ட் படங்களில் இருந்தும், அறிந்தும் அறியாமலும், கண்டநாள் முதல், பட்டியல் போன்ற சிறிய பட்ஜெட் படங்களில் இருந்தும்.. பருந்துவீரன், பில்லா போன்ற படங்கள் வேறு ரகம்.
அறிந்தும் அறியாமலும் படத்தில் கதாநாயகன், கிராமத்தில் கதாநாயகியை சந்திக்கும் காட்சியில் அற்புதமான பின்னணி இசையை அமைத்திருப்பார். ஆனால், இந்தப் படத்தின் ஹைலைட் பிரகாஷ் ராஜ்-ன் பாசக் காட்சிகள்தான். படத்தின் முதல் பாதி அதிரடியாகவும், இரண்டாவது பாதி அப்படியே பாசம் கலந்த காட்சிகளுடன் நிறம் மாறிவிடும்.
கதாநாயகன் ரூமில் தூங்கிக் கொண்டிருக்கும் அழகை பிரகாஷ் ராஜ்ஜும், ஆர்யாவும் பார்த்து ரசிக்கும் காட்சிக்கு க்யூட்டான இசையை கொடுத்திருப்பார் யுவன். கண்டநாள் முதல் படத்தின் பிரசன்னா, லைலா இடையிலான காதல் காட்சிகளை இரண்டாம் பாதியில் தாங்கி பிடித்திருப்பதே யுவனின் பின்னணி இசைதான். சின்ன சின்ன காட்சிகளையெல்லாம் தன்னுடைய இசையால் மெருகேற்றியிருப்பார். அதுவும் க்ளைமேக்ஸில் ‘காதலே காதலே எங்கு போகிறாய்’ என்ற க்யூட்டான குட்டி சாங்கும், அதனை தாங்கிப் பிடிக்கும் இசையும் படத்தோடு அப்படியே நம்மை ஒன்ற வைத்துவிடும்.
பருத்திவீரன் படத்தில் பின்னணி இசையில் விளையாடி இருப்பார் யுவன். முத்தழகு, பருத்துவீரன் இடையிலான காதல் காட்சிகளில் ‘ஏலே ஏலேலே எலஎலலெ.. என்ற ஹம்மிங் குரல்.. பின்னணி இசையும் நம்முடைய இதயங்களை அழகாய் வருடிவிடும். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அவ்வளவு அழகாய் பல படங்களில் நேர்த்தியான பின்னணி இசையை கொடுத்திருப்பார் யுவன்.
புதுப்பேட்டை போன்ற கல்ட் படங்களை பொறுத்தவரை பின்னணி இசை முற்றிலும் அடுத்த லெவலில் இருக்கும். கல்ட் படங்களுக்கு பின்னணி இசை எவ்வளவு முக்கியம் என்பதை அதன் இயக்குநர்கள் நன்கு உணர்ந்திருப்பார்கள். அதாவது, இதுபோன்ற படங்களில் ஒவ்வொரு லேயராக பிரித்து பிரித்து ஒன்றுபோல் மற்றொன்று இல்லாத அளவிற்கு படத்தின் முக்கியமான எல்லா காட்சிகளில் கதையை சொல்லும் இடத்தில் பின்னணி இசையும் இடம் பிடித்திருக்கும். ஆரண்ய காண்டம் போன்ற படங்கள் பாடல்களை தவிர்த்து பின்னணி இசையை மட்டுமே கொண்டு எடுக்கப்பட்டவை. அந்தப் படத்தில் பின்னணியில் அப்படி மிரட்டியிருப்பார் யுவன்.
செல்வராகவன் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளியான காதல் கொண்டேன் திரைப்படம் யுவன் சங்கர் ராஜாவின் இசை வாழ்வில் ஒரு மைல்கல். இந்தப் படத்தின் பின்னணி இசைக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. பின்னணி இசை ஹாலிவுட் ஸ்டைலில் அமைத்திருப்பார் யுவன். இதன் சிறப்பு என்ன வென்றால் பின்னணி இசைக் கோர்வைகளின் ஒரு பகுதியை ஒரு சிடி ஆக அப்போது வெளியிட்டனர். இந்தியாவில் பின்னணி இசைக்கு சிடி வெளியிடப்பட்ட முதல் படம் இதுதான்.
புதுப்பேட்டை படத்தின் பின்னணி இசை யுவனின் மாஸ்டர் பீஸ். எந்த அளவிற்கு இந்தப் படத்திற்கு பின்னணி இசை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை வெளியிடப்பட்ட சவுண்ட் ட்ரேக்கரில் 6 பாடல்களுடன் 4 இன்ஸ்ட்ருமெண்டல் இசை ரிலீஸ் செய்யப்பட்டது.
புதுப்பேட்டை படத்திற்கான இசை தாய்லாந்தில் கம்போஸ் செய்யப்பட்டது. பாங்காங்கை சேர்ந்த சாப்ரயா சிம்பொனி ஆர்கேஸ்ட்ராவை தன்னுடைய கம்போஸிங்கிற்கு பயன்படுத்தினார் யுவன். ஹாலிவுட் படங்களுக்கு நிகரான இசையை இந்தப் படத்திற்கு கொடுத்திருப்பார்.
இதனை புதுப்பேட்டையின் மிகவும் பிரபலமான ஒரு காட்சியில் இருந்தே பார்க்கலாம். மூர்த்தி ஏரியாவில் போஸ்டர் ஒட்டிய அன்புவின் ஆட்கள் சிக்கிக் கொள்வார்கள். அன்புவின் ஆட்கள் எல்லோரும் தப்பிச் செல்லும் காட்சிக்கே பின்னணி இசை அட்டகாசமாக இருக்கும். இது போன்ற இசையை நாம் ஹாலிவுட் படங்களில் பார்த்திருக்கலாம். பின்னர், மூர்த்தி ஆட்களிடம் சிக்கிக் கொண்டு கொக்கி குமார் பயங்கரமாக அடிவாங்கிக் கொண்டிருப்பார்.
மூர்த்தியின் தம்பி தன்னுடைய கை வலிக்க அடிப்பார். ஒரு கட்டத்தில் வலி தாங்க முடியாமல் தன்னை கொல்ல வந்தவனை கொக்கிக் குமார் திருப்பி அடிப்பார். கொக்கி குமார் செருப்பை தத்தி தத்தி நடக்கும் போதில் இருந்து பின்னணி இசை ஆரம்பிக்கும். பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக இசை உச்சத்தை நோக்கி சென்று கொண்டே இருக்கும்.
பின்னர், சகாக்கள் வந்து கொக்கி குமாரை தள்ளுவண்டியில் வைத்து தப்பிக்க வைப்பார்கள். அப்போது பின்னணி இசை உச்சத்தை தொடும். ஒருவன் எமர்ஜ் ஆகிவிட்டான் என்பதை குறிக்கும் வகையில் அந்த பின்னணி இசை அமைந்திருக்கும். பின்புறத்தில் சூரிய உதயமும் அதனை மறைமுகமாக குறிக்கும். புதுப்பேட்டை படத்தை கவனித்தால் ஒவ்வொரு காட்சியையும் பின்னணி இசை எப்படி தோள்மேல் சுமந்து செல்கிறது என்பது நமக்கு புரியும். ஒரு பின்னணி இசை கூட திரும்ப வராது.
யுவன் இசை உலகத்தில் பயணித்து 25 வருடங்கள் கடந்து இருந்தாலும் பின்னணி இசைக்கு அவர் கொடுத்திருக்கும் நவீனத்துவம் தான் தமிழ் சினிமாவில் பின்னணி இசையை வேறொரு ஆரூடத்திற்கு நகர்த்தி இருக்கிறது. இன்னும் 25 வருடஙக்ள் கடந்தாலும் யுவனின் பின்னணி இசை தனித்துவம் பெற்று காலம் கடந்து நிற்கும். “ என் இதயத்தை வழியில் எங்கோயோ மறந்து தொலைத்து விட்டேன்” என்ற யுவனின் ஒரு பாடல் வரிகள் அவருடைய பின்னணி இசைக்கே 100 சதவீதம் பொருந்தும். பலருடைய இதயத்தின் வலிகளை தொலைக்கச் செய்த மகுடி வித்தைக்காரனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.