ஆர்.பி.உதயகுமாருக்கு கொலை மிரட்டல்… கூட்டுறவு சங்கத் தலைவர் கைது – என்ன நடந்தது?

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள நெற்கட்டும்செவல் கிராமத்தில் மாமன்னர் பூலித்தேவன் 307-வது பிறந்ததின நிகழ்ச்சி நாளை (செப்டம்பர் 1-ம் தேதி) நடக்கிறது. அரசு விழாவாக நடக்கும் இந்த விழாவில் அரசு சார்பில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். அத்துடன் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள்.

இந்த விழாவில், அ.தி.மு.க சார்பாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இந்த நிலையில், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து ஒருவர் பேசும் ஆடியோ வைரலாக பரவியது. ஓ.பி.எஸ், சசிகலா ஆகியோரை அ.தி.மு.க-வில் சேர்ப்பது குறித்து ஆர்.பி.உதயகுமார் கருத்து தெரிவிக்கையில், “அப்படி நடந்தால் தற்கொலை செய்துகொள்வேன்” எனத் தெரிவித்ததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், அந்த ஆடியோவில் பேசியவர் தடித்த வார்த்தைகளில் குறிப்பிட்டிருந்தார்.

ஆர்.பி. உதயகுமார்

சமூக வலைதளங்களில் அந்த ஆடியோ வைரலாகப் பரவியததைக் கண்ட அ.தி.மு.க-வினர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கொக்குகுளம் அ.தி.மு.க நிர்வாகி விஜயபாண்டி என்பவர் அய்யாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர். இந்த நிலையில், சங்கரன்கோவில் டவுன் காவல் நிலையத்தில் அ.தி.மு.க வடக்கு ஒன்றியச் செயலாளர் மகாராஜனும் புகார் அளித்தார்.

இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவுசெய்து போனில் மிரட்டியவரை தேடிவந்தனர். இந்த நிலையில், மகேந்திரவாடியைச் சேர்ந்த சரவணபாண்டியன் (37) என்பவரை கைதுசெய்தனர்.

கைது செய்யப்பட்ட சரவணபாண்டியன்

அவர் மகேந்திரவாடி கூட்டுறவு சங்கத்தில் தலைவராக உள்ளார். அவரை போலீஸார் விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

சென்னையில் அ.தி.மு.க அலுவலகத்தில் நடந்த தாக்குதலின்போது சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த சிலரும் அந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாகத் தகவல் பரவியிருந்த நிலையில், ஆர்.பி.உதயகுமாருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதால் நெற்கட்டும்செவல் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.