தைபே: தங்களது நாட்டு வான்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த சீனாவின் ஆளில்லா டிரோன்களை எச்சரிக்கை செய்யும் வகையில் தைவான் துப்பாக்கிச் சூடு நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தைவான் நாட்டை ஆக்கிரமிப்பதில் சீனா பெரும் முனைப்பாக இருக்கிறது. சீனாவைப் பொறுத்தவரை தைவான் தங்களது நாட்டின் ஒரு பகுதி என்கிறது.
ஆனால் தைவானோ, நாங்களே உண்மையான சீனா; எங்கள் நாடு தனிநாடுதான் என்பதில் உறுதியாக உள்ளது. சீனா, தைவான் விவகாரத்தில் உலக நாடுகள் குழப்பமான நிலையில்தான் உள்ளன. இந்த நிலையில் தைவானுக்கு அமெரிக்கா பகிரங்கமாக ஆதரவு தெரிவித்தது. அந்நாட்டின் பிரதிநிதி நான்சி பெலோசி அண்மையில் தைவான் சென்றது பெரும் சர்ச்சையாக வெடித்தது.
நான்சி பெலோசியின் தைவான் பயணத்துக்குப் பின்னர் அந்த பிராந்தியத்தில் சீனா தமது ராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி உள்ளது. குறிப்பாக தைவான் ஜலசந்தியை சூழ்ந்து சீனா அதி தீவிரமாக போர் ஒத்திகைகளை நடத்தி வருகிறது. சீனாவின் இந்த ஆத்திரமூட்டும் நடவடிக்கைக்கு எதிராக, அமெரிக்காவின் போர்க்கப்பல்களும் தைவான் ஜலசந்தியில் முகாமிட்டதால் அதி உச்சமான போர் பதற்றம் நிலவியது.
இந்த நிலையில் தைவானுக்குள் வழக்கம் போல சீனாவின் ஆளில்லா விமானங்கள் அத்துமீறி பறந்தன. தைவானின் தீவுகளுக்குள் சீனாவின் டிரோன்கள் பறந்தன. இதனையடுத்து சீனாவின் டிரோன்களுக்கு எச்சரிக்கை தரும் வகையில் வானை நோக்கி தைவான் ராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனைத் தொடர்ந்து சீனா பிராந்தியத்துக்குள் டிரோன்கள் திசைமாறி சென்றன. அதேநேரத்தில் சீனாவின் டிரோன் ஒன்றை தைவான் சுட்டுவீழ்த்திவிட்டதாகவும் கூறப்படுகிறது.
தைவானின் இந்த பதிலடி தாக்குதலானது சீனாவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தும் அந்த தேசத்தை ஆக்கிரமித்துவிட முடியவில்லை. உக்ரைன் மீதான போரின் உந்துதலால் தைவானை கபளீகரம் செய்ய சீனா முயன்று வருகிறது. இந்த நிலையில் தைவானின் பதிலடி நடவடிக்கை சீனாவுக்கு அதிர்ச்சி தரக் கூடியதுதான் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். அமெரிக்கா தங்கள் பக்கம் இருக்கிறது என்கிற நம்பிக்கையில்தான் தைவான் இத்தாக்குதலை நடத்தி இருக்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது.