தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், ஓட்டப்பிடாரம், கயத்தார் உள்ளிட்ட தாலுகாக்களில் புரட்டாசி ராபி பருவத்தில் சாகுபடி செய்திட விவசாயிகள் தயாராகி வருகின்றனர். விளைநிலங்களில் போடப்படும் அடி உரமான டி.ஏ.பி, கடந்த ஆண்டில் தட்டுப்பாடு காரணமாக கிடைக்காமல் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டனர். இதனைக் கருத்தில் கொண்டு விவசாயிகள், இந்தாண்டு முன்கூட்டியே டி.ஏ.பி மூட்டைகளை அனைத்து கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் தேவையான அளவு இருப்பு வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில், கடந்த 10 நாட்களாக கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம், புதூர் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் தஞ்சாவூர், கடலூர், அறந்தாங்கி, பட்டுக்கோட்டை பகுதியில் இருந்து வந்த சிலர் டி.ஏ.பி உரத்திற்கு இணையான ’இயற்கை கடல் பாசி உரம்’ என்ற பெயரில் 50 கிலோ கொண்ட மூட்டை ரூ.1,300 எனக் கூறி விற்பனை செய்துள்ளனர். விவசாயிகள் அந்த உர மூட்டைகளை அவிழ்த்துப் பார்த்தபோது அதில் வெறும் களிமண் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அதனைப் பரிசோதனை செய்ததிலும் அது வெறும் களிமண்தான் எனத் தெரிய வந்துள்ளதாகவும் விவசாயிகள் சொல்கிறார்கள். ஒவ்வொரு விவசாயியும் 5 முதல் 20 உர மூட்டைகளை அவர்களிடமிருந்து வாங்கியுள்ளனர். இது குறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜனிடம் பேசினோம், “ரெண்டு மூணு வருஷமாவே உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுச்சு. இந்த வருஷமும் தட்டுப்பாடு ஆயிடக்கூடாதுன்னுதான் பல விவசாயிகள் உர மூட்டைகளை வாங்கி வைத்துள்ளனர். இந்தப்பகுதி விவசாயிகளோட உரத்தேவையை புரிஞ்சுக்கிட்டுதான் ’இயற்கை உரம்’ எனச்சொல்லி வெறும் களிமண்ணை மூட்டைகள்ல நிரப்பி ஏமாற்றியிருக்காங்க. உரத் தட்டுப்பாட்டினை போக்க அரசு நடவடிக்கை எடுப்பது மட்டுமின்றி இது போன்ற கும்பல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார் ஆதங்கத்துடன்.
தூத்துக்குடி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் முகைதீனிடம் இதுகுறித்துப் பேசினோம், “இது தொடர்பாக புகார் வந்துள்ளது. ஓட்டப்பிடாரம் தாலுகாவிற்குட்பட்ட கிராமங்களில் அதிகளவு உரம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தினோம். தஞ்சாவூர் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. அங்குள்ள வேளாண்மை துறை அதிகாரிகள் மூலம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூறியுள்ளோம்” என்றார்.