“அரச நிறுவனங்களின் சீர்திருத்தங்கள் மற்றும் மின்சாரத் துறையின் சீர்திருத்தங்கள் மற்றும் இருதரப்பு மற்றும் பலதரப்புக் கடனை மறுசீரமைத்தல் போன்ற கட்டமைப்புப் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் இலங்கைக்கு கடினமான காலங்கள் இன்னும் முடிவடையவில்லை” என இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் புதுடில்லியில் வைத்து இன்று கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
திருகோணமலை எண்ணெய் பண்ணை மற்றும் இரு நாடுகளுக்கும் இடையே எரிசக்தி குழாய் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இலங்கை மற்றும் இந்தியா விவாதித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் சீன கப்பல் விடயத்தில் ஏற்பட்டதை போன்ற நிலையை தடுக்க இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் உள்ள அனைத்து விடயங்களில் ‘தெளிவான உரையாடல்’ தேவை என்பதை மொரகொட இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் தமது உத்தியோகப்பூர்வ ருவிட்டர் பதிவிலும் குறிப்பிட்டுள்ளார்.
India is anchor of regional security, says Sri Lanka’s envoy Milinda Moragoda | Latest News India – Hindustan Times #lka #SriLanka https://t.co/hhDtHCihcR
— Milinda Moragoda (@MilindaMoragoda) August 31, 2022
இந்திய இலங்கை உறவு
திருகோணமலை எண்ணெய்ப் பண்ணை மற்றும் தேசிய அடையாள அட்டைத் திட்டம் போன்ற இந்தியாவின் ஆதரவுடன் செயற்படுத்தும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் ரணில் தலைமையிலான புதிய அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.
இலங்கை மண்ணையோ அல்லது கடல் பகுதியையோ இந்தியாவுக்கு எதிராக எந்த வகையிலும் அல்லது இந்தியாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலாக பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் எனவும் மிலிந்த மொரகொட வலியுறுத்தியுள்ளார்.
1987ஆம் ஆண்டு இந்தியாவும் இலங்கையிடம் இந்த உறுதி மொழியை அளித்துள்ளதாக அவர் இன்று புதுடில்லியில் வைத்து குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கான முயற்சிகளுக்கு இந்தியாவை ‘தர்க்கரீதியான பங்காளி’ என்று மொரகொட விபரித்துள்ளார்.
கடந்த எட்டு அல்லது ஒன்பது மாதங்களில் ஒவ்வொரு திருப்பத்திலும் இந்தியா உண்மையில் இலங்கைக்கு ஆதரவளித்துள்ளது.
இலங்கைக்கு கடினமான காலங்கள்
இந்தியா இல்லையென்றால் இலங்கை கடுமையான பொருளாதாரப் பிரச்சினையை எதிர்நோக்கியிருக்கும். எனவே இலங்கையர்கள் இந்தியாவுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என்று இதன்போது தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இந்தியா 3.8 பில்லியன் டொலர் மதிப்பிலான உதவிகளை இலங்கைக்கு வழங்கியது. இதில் இடைக்கால நிதி மற்றும் சுற்றுலா போன்ற துறைகளில் முதலீடுகளைப் பெறுவதற்கான முயற்சிகள் அடங்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.