மாஸ்கோ: ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளை உள்ளடக்கியதாக இருந்த சோவியத் யூனியன் அல்லது சோவியத் ஒன்றியத்தின் கடைசி அதிபராக இருந்த மிக்கைல் கோர்பசேவ் (வயது 91) காலமானார்.
20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் லெனின் தலைமையிலான ரஷ்ய புரட்சியின் விளைவாக உருவானதுதான் சோவியத் யூனியன் அல்லது சோவியத் ஒன்றியம். லெனின், ஸ்டாலின் காலத்தில் கட்டமைக்கப்பட்டது சோவியத் ஒன்றியம். இந்த கூட்டமைப்பில் சுமார் 15 நாடுகள் இடம்பெற்றிருந்தன.
உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றாக சோவியத் ஒன்றியம் இருந்தது. அப்போதைய உலக ஒழுங்கில் சோவியத் ஒன்றியம் மிக முக்கியமான இடத்தில் இருந்தது. இன்றைய புதிய உலக ஒழுங்கு என்பதும் சோவியத் ஒன்றியத்தின் சிதைவின் மீது கட்டமைக்கப்பட்டதுதான்.
சோவியத் ஒன்றியத்தின் கடைசி அதிபராக 1985-ம் ஆண்டு பொறுப்பேற்றவர் மிக்கைல் கோர்பசேவ். இவரது ஆட்சிக் காலத்தில் சோவியத் ஒன்றியத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்பட்டன. சோவியத் ஒன்றியத்தில் இருந்து நாடுகள் பிரிந்து செல்லும் உரிமையையும் கோர்பசேவ் அனுமதித்தார். இதன் விளைவாக 1991-ல் சோவியத் ஒன்றியம் என்கிற கட்டமைப்பு கலைந்து போய் அதில் இடம்பெற்றிருந்த உக்ரைன், லிதுவேனியா உள்ளிட்ட 15 நாடுகள் சுதந்திர நாடுகளாகின. 1990-ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் கோர்பசேவ்.
உலக சரித்திரத்தில் இடம்பெற்ற கோர்பசேவ் தமது 91-வது வயதில் முதுமை காரணமாக காலமானார். கோர்பசேவ் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.