புதுடெல்லி: நாடு முழுவதும் 2021ம் ஆண்டில் மட்டும் 1 லட்சத்து 64 ஆயிரத்து 33 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ‘இந்தியாவில் விபத்து மரணங்கள் மற்றும் தற்கொலைகள்’ என்ற தலைப்பில் மாணவர்கள், சம்பளம் பெறுபவர்கள், தினசரி ஊதியம் பெறுபவர்கள், ஓய்வு பெற்றவர்கள், வேலையில்லாதவர்கள், சுயதொழில் செய்பவர்கள், வீட்டு வேலை செய்யும் பெண்கள், விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ள நபர்கள் மற்றும் பிற நபர்கள் என 9 வகையான பிரிவுகள் மற்றும் தொழில் அடிப்படையில் மக்களை வகைப்படுத்தி புதிய பட்டியலை தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் கடந்த 2021ம் ஆண்டில் 1,64,033 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் 1,18,979 பேர் ஆண்கள். 45,026 பேர் பெண்கள். அதிகபட்சமாக 37,751 பேர் தினசரி ஊதியம் பெறுபவர்கள், 20,231 பேர் சுயதொழில் செய்பவர்கள், 13,714 பேர் வேலையில்லாதவர்கள், 5,318 பேர் விவசாயிகள், 5,563 பேர் விவசாய கூலி தொழிலாளிகள். தற்கொலை செய்த 1,64,033 பேரில் தனியார் துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் 11,431 பேர், அரசு ஊழியர்கள் 1,898 பேர் ஆவர். தற்கொலை செய்து கொண்டவர்களில் மொத்தம் 64.2 சதவீதம் (1,05,242) பேர் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கும் குறைவாக உள்ளனர். 31.6 சதவீதம் (51,812) ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சத்துக்கும் குறைவானவர்கள். தற்கொலை செய்து கொள்பவர்களின் 4ல் ஒருவர் தினசரி ஊதியம் பெறுபவர்கள் ஆவர். தற்கொலை செய்து கொண்டவர்களில் 1,09,749 பேர் திருமணமானவர்கள். 24 சதவீதம் பேர் திருமணமாகாதவர்கள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முதலிடத்தில் மகாராஷ்டிரா
* அதிக தற்கொலைகள் நடந்த மாநிலங்கள் பட்டியிலில்
மகாராஷ்டிரா (22,207) முதலிடத்திலும், தமிழ்நாடு (18,925) 2வது இடத்திலும் உள்ளன.
* தற்கொலை செய்தவர்களில் 23,178 பேர் இல்லத்தரசிகள், 5,693 பேர் மாணவிகள்,
2,485 பேர் விதவைகள்,
788 விவகாரத்து பெற்றவர்கள், 871 பேர் பிரிந்தவர்கள்.
* 28 திருநங்கைகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
* பலாத்கார சம்பவங்கள் முதலிடத்தில் டெல்லி; கொல்கத்தா கடைசி இடம்
பலாத்கார சம்பவ வழக்குகள் அதிகம் பதிவாகும் நகரங்கள் குறித்த அறிக்கையை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டிலேயே பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகம் நிகழும் பட்டியலில் டெல்லி முதலிடத்தில் உள்ளது. இங்கு கடந்த 2021ம் ஆண்டில் மொத்தம் 1226 பலாத்கார வழக்குகள் பதிவாகி உள்ளன. 2வது இடத்தில் ஜெய்ப்பூர் உள்ளது. இங்கு 504 வழக்குகள் பதிவாகியுள்ளது. 364 வழக்குகளுடன் மும்பை மூன்றாவது இடத்தில் உள்ளது. குறைந்த வழக்குகள் பதிவாகும் நகரங்களில் கொல்கத்தா இடம்பெற்றுள்ளது. இங்கு கடந்த ஆண்டு 11 பாலியல் பலாத்கார வழக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது. மேலும் பாலியல் பலாத்கார முயற்சி வழக்குகள் பதிவாகாத நகரங்கள் பட்டியலிலும் கொல்கத்தா இடம் பிடித்துள்ளது. தமிழ்நாட்டில் கோவையில் 12 வழக்குகள் பதிவாகி உள்ளது.