*50 அடி உயரத்திற்கு மேலே தண்ணீர் வெளியேறியதால் பரபரப்பு
தோகைமலை : கடவூர் தரகம்பட்டியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைந்து சுமார் 50 அடி உயரத்திற்கு தண்ணீர் பீச்சி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாவட்டம் மாயனூர் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் நத்தம், ஒட்டசத்திரம் பகுதியில் உள்ள 1276 கிராம பகுதிகளுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் செல்கிறது.
இந்த காவிரி குடிநீர் திட்டமானது தரகம்பட்டி, மைலம்பட்டி வழியாக பைப் குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் நேற்று தரகம்பட்டி வழியாக வையம்பட்டி செல்லும் சாலையில் விரிவாக்க பணிகள் நடந்தது. அப்போது தரகம்பட்டி பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு நடுநிலைப்பள்ளி அருகே ஜே.சி.பி இயந்திரம் மூலம் சாலை ஓரத்தில் பள்ளம் தோண்டிய போது, எதிர்பாராத விதமாக காவிரி கூட்டு குடிநீர் குழாய் சேதமானது.
இதனால் குழாய் உடைந்து காவிரி குடிநீர் சுமார் 50 அடி உயரம் பீச்சி அடித்தது. இதனால் கரூர் வையம்பட்டி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். தொடர்ந்து குழாயில் சென்ற காவிரி குடிநீரை மின்மோட்டார்களை நிறுத்தினர். அதன்பிறகு பீச்சி அடித்த தண்ணீரை கட்டுப்படுத்திய அதிகாரிகள் சேதமான குழாயை சரிசெய்து வருகின்றனர்.
கடவூர் தரகம்பட்டியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைந்து சுமார் 50 அடி உயரத்திற்கு தண்ணீர் பீச்சி அடித்ததால் நேற்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையும் குடிநீர் வெளியேறி கொண்டு இருந்து. அதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.