களக்காடு அருகே மீண்டும் ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை : பனை மரங்களை சாய்த்தது

களக்காடு : களக்காட்டில் மீண்டும் ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை பனை மரங்களை சாய்த்து அட்டகாசம் செய்ததால் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள்  காப்பகத்திற்குட்பட்ட சிதம்பராபுரம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் கடந்த 10 நாட்களாக ஒற்றை காட்டு யானை நடமாட்டம் காணப்படுகிறது.

வனப்பகுதியிலிருந்து இடம் பெயர்ந்து வந்த ஒற்றை யானை மலையடிவார புதர்களில் தஞ்சமடைந்து இரவில் விளைநிலங்களுக்குள் புகுந்து வருகிறது. ஏற்கனவே சத்திரங்காடு பகுதியில் 3க்கும் மேற்பட்ட பனைகளை சாய்த்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அகலிகை சாபம் தீர்த்த அய்யன் சாஸ்தா கோயில் அருகே உள்ள விளைநிலங்களுக்குள் ஒற்றை காட்டு யானை புகுந்தது. இந்த யானை அங்கிருந்த 3 பனை மரங்களை சாய்த்து அதன் குருத்துக்களை ருசித்து சாப்பிட்டுள்ளது.

இந்த சத்தம் கேட்டு வந்த விவசாயிகள் யானையை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அதனை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் யானை நீண்டநேரம் அங்கு சுற்றி திரிந்தது. பின்னர் மலையடிவார புதர்களுக்குள் சென்று விட்டது.  இதுகுறித்து பா.ஜ. விவசாய அணி நெல்லை மாவட்டத் தலைவர் சேர்மன் துரை கூறுகையில் ‘‘யானை நடமாட்டத்தால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர், பகல் நேரங்களில் கூட விளைநிலங்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.

இதனால் விவசாயிகளின் உயிருக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. யானை நடமாட்டம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தும் வனத்துறையினர் யனையை விரட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.  எனவே ஊருக்குள் புகுந்து அச்சுறுத்தி வரும் ஒற்றையானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் எவ்வித பாகுபாடும் இன்றி உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.