திருவனந்தபுரம்: காங்கிரஸ் தலைவர் பதவிக்கு 22 வருடங்களுக்குப் பிறகு, அக்டோபர் 17ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. . இந்நிலையில், தலைவர் தேர்தலில் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், திருவனந்தபுரம் எம்பி.யுமான சசிதரூர் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், திருவனந்தபுரத்தில் நேற்று சசிதரூர் அளித்த பேட்டியில், ‘தலைவர் பதவிக்கு போட்டி ஏற்படுவது கட்சிக்கு நல்லதுதான். காங்கிரஸ் என்றால் அது ஒரு தனி நபரை சார்ந்தது அல்ல. ஒரு குடும்பத்தில் இருந்து தலைவர் வர வேண்டுமா? அல்லது குடும்பத்தின் பிரதிநிதி வேண்டுமா? அல்லது வெளியே இருந்து ஒரு நபர் தலைவராக வேண்டுமா? என்பதை போட்டியின் மூலம் தீர்மானிக்கட்டும். நான் மட்டுமல்ல, மேலும், பலர் தலைவர் பதவிக்கு போட்டியிட தயாராகி வருகின்றனர். வட மாநிலத்தை சேர்ந்தவர் தான் தலைவராக வரவேண்டும் என்ற கட்டாயம் இல்லை,’ என தெரிவித்தார்.