வேடசந்தூர்: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரிலிருந்து கரூர் செல்லும் சாலையில் நேற்று மாலை 5 மணியிலிருந்து அதிகளவு மழை பெய்து கொண்டிருந்தது. அந்தப் பகுதியில் தரைப்பாலத்தில் பயங்கரமான காட்டாற்று வெள்ளம் சென்றதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வெள்ளோடு பகுதிக்கு திண்டுக்கல்லில் இருந்து சென்று விட்டு சண்முகம் (53) என்பவர், காரில் 5 பேருடன் திரும்பி வந்து கொண்டிருந்தார். காட்டாற்று வெள்ளத்தை பொருட்படுத்தாமல் தரைப்பாலம் வழியாக சண்முகம் காரில் செல்ல முயன்றார். அப்போது சிறப்பு எஸ்ஐ சந்திரசேகரன் தடுத்தும் அவர்களின் பேச்சைக் கேட்காமல் காட்டாற்று வெள்ளத்துக்குள் இறங்கி காரை சண்முகம் ஓட்டி சென்றுள்ளார். அப்போது காரை காட்டாற்று வெள்ளம் இழுத்துச்சென்றது. இதில் காருடன் சேர்ந்து 6 பேரும் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர். இதனையடுத்து சிறப்பு எஸ்ஐ சந்திரசேகர் அப்பகுதி கிராம இளைஞர்களோடு இணைந்து காருடன் வெள்ளத்தில் சிக்கிய 6 பேரையும் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போராடி மீட்டார்.