இளையராஜா வழியில் இசைப்பயணத்தை தொடரும் யுவன் சங்கர் ராஜா மெலோடி, பிஜிஎம் இசைக்கு பெயர் போனவர்.
யுவன் சங்கர் ராஜா பிறந்த நாள் இன்று. தந்தை வழியில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கிறார்.
அவர் திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிறது. அதை கொண்டாடும் வகையில் சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார்.
புதுமைகள் படைத்த இளையராஜா
தமிழ் திரையுலகில் 1970 களின் இறுதிவரை பல இசையமைப்பாளர்கள் கோலோச்சினர். குறிப்பாக எம்.எஸ்.வி, சங்கர் கணேஷ் போன்றோர். எம்ஜிஆர் திரையுலகை விட்டு ஒதுங்கிய நிலையில் சிவாஜி கணேசன் நடிப்பை தொடர்ந்தார். புது வரவுகளான ரஜினி, கமல் உள்ளிட்டோர் திரையுலகில் நுழையும் காலம். பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா, பாலசந்தர் என புதுமை இயக்குநர்களின் வருகை கிராமங்களை நோக்கி தமிழ் சினிமா நகர்ந்த நேரம் அந்த ரசனைக்கு ஏற்ப இசையமைக்க பஞ்சு அருணாச்சலம் அறிமுகப்படுத்திய புதுமுகம் ராசய்யா என்கிற இளையராஜா கால் பதித்தார்.
இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், யுவன்
இதுவரை இருந்த இசையும், கிராமிய மணத்துடன் கூடிய இசையையும் கலந்து இளையராஜா தந்த மனதை வருடும் பாடல்களுக்கு அடிமையாகாதோர் யாரும் இல்லை எனும் அளவுக்கு அவரது இசையால் ஆகர்ஷிக்கப்பட்டோர் அடுத்த 30 ஆண்டுகளுக்கு அடிமைப்பட்டு கிடந்தனர். அதன் பின்னர் 90 களில் கால் பதித்த ஏ.ஆர்.ரஹ்மான் புதுமை இசை மூலம் கால் பதித்தார். இவர்கள் இருவர் தவிர வேறு யாரும் பெரிய அளவில் கால் பதிக்க முடியவில்லை.
பேசப்பட்ட பூவெல்லாம் கேட்டுப்பார்
அதன் பின்னர் 1997 ஆம் ஆண்டு அரவிந்தன் படம் மூலம் அறிமுகமானார் இளையராஜாவின் இளைய மகன் யுவன் ஷங்கர் ராஜா. இளையராஜாவை கொண்டுவந்த பஞ்சு அருணாச்சலம் தான் யுவனையும் கொண்டுவந்தார். அரவிந்தன், வேலை, கல்யாண கலாட்டா என இரண்டு வருடத்தில் 3 படம். அடுத்து அவர் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் அமைத்த இசை யுவனை பற்றி பேச வைத்தது. அதில் பல பாடல்கள் ஹிட் ஆனது.
பிஜிஎம் கிங் யுவன்
அதுவரை தந்தையின் சாயலில் இசையமைத்து வந்த யுவன் 2000 மேல் இசையமைத்த தீனா படத்தில் அவர் போட்ட பீஜிஎம் இசையால் பிரபலமானார். பின்னர் பல படங்களுக்கு யுவன் இசையமைத்தார். சூர்யாவுக்கு பெயர் வாங்கிகொடுத்த படங்கள், தனுஷின் முதல் படமான துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன் உள்ளிட்ட செல்வராகனின் படங்கள் என அடுத்த 15 ஆண்டுகள் யுவனிசமே ஆட்சி செலுத்தியது. பிஜிஎம்முக்காக பெயர் பெற்றவர் யுவன். பில்லா படத்தில் அவரது இசை தனியாக இருக்கும்.
கங்கை அமரனை ஏமாற்றிய யுவன்
தனது தனித்துவமான இசையால் யுவன் பெரிய அளவில் பேசப்படுகிறார். தந்தைக்குப்பின் அவர் வழியில் ஆனால் அந்த இசையை பின்பற்றாமல் தனக்கென ஒரு பாணியுடன் பயணிக்கிறார் யுவன். தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த கங்கை அமரன் தனது அண்ணன் மகன் யுவன்ஷங்கர் ராஜா பற்றி ஒரு ஆச்சர்யமான தகவலை சொன்னார். சிறிய வயதில் பொறுப்போடு இசையைக்கற்று இசையமைக்க பயிற்சி எடுத்தவர் கார்த்திதான், யுவன் சங்கர் ராஜா, வெங்கட் பிரபு, யுவன் எல்லோரும் ஒன்றாக திரிவார்கள். யுவன் ரூமில் கண்டபடி போட்டு எதையோ அடிச்சிகிட்டிருப்பான், நான் கூட கார்த்திக்தான் அண்ணனுக்கு அப்புறம் அவர் இடத்தை பிடிப்பார்னு நினைச்சேன் ஆனால் யுவன் என் கணிப்பை பொய்யாக்கிவிட்டார் ” என்று கூறினார்.
வழக்கமான பாணியை கைவிட்டவர்கள் வென்றார்கள்
வழக்கமான வழியில் செல்லாமல் இருக்கிற சூழ்நிலையில் என்ன மாற்றத்தை செய்ய முடியும் என கணித்து அதைக் கொண்டு வந்தவர் இளையராஜா. அதேபோல் ஏ.ஆர்.ரஹ்மானும் இளையராஜா பாணியை பின்பற்றாமல் ஒரு புதுபாணியை பின்பற்றியதால் உலக அளவில் பிரபலமானார். யுவனும் தனக்கென ஒரு பாணியை பின்பற்றினார். ஆனால் ஒரு சுவார்ஸ்யமான விஷயம் என்னவென்றால் ஆரம்பகாலத்தில் தன் சித்தப்பா கங்கை அமரனின் ட்யூன், அப்பாவின் டியூன்களை நைசாக காப்பி அடித்ததாக வெங்கட் பிரபு, யுவன் எல்லோரும் மேடையில் ஒப்புக்கொள்வார்கள்.