மதுரை: காவிரியில் கழிவுகள் கலப்பதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஐகோர்ட் கிளையில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் மனு தள்ளுபடியானது. ஈரோடு மாவட்டம், சோளிப்பாளையம் அருகே அவல்பூந்துறையை சேர்ந்த சதீஷ்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘கரூர் மாவட்டம், திருக்காம்புளியூரில் காவிரி ஆற்றங்கரையில் பிரசித்தி பெற்ற செல்லாண்டி அம்மன் கோயில் உள்ளது. கோயில் பகுதியில் முறையான கழிவறை வசதி இல்லை.
இதனால், தனியார் கட்டண கழிவறைகள் மூலம் வசூல் செய்கின்றனர். இந்த கழிவறைகள் போதிய சுகாதாரமின்றி உள்ளன. இந்த கழிவறைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை கோயில் அருகே காவிரி ஆற்றில் விடுகின்றனர். இதனை தடுக்கவும், பக்தர்களின் நலனுக்காக போதிய கழிவறை வசதி செய்து தருமாறும் உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஜி.சந்திரசேகரன் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில், ‘‘காவிரி ஆற்றில் கழிவுகள் கலப்பதை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் அரசு தரப்பில் மேற்கொள்ளப்படுகிறது’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், ‘‘மனுதாரர் கழிவுகள் கலப்பதை தடுக்கவும், கழிவறைகள் கட்டவும் கோரியுள்ளார். அதே நேரம் அரசு தரப்பில் உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்பதால் தள்ளுபடி செய்யப்படுகிறது. அதே நேரம் எதிர்காலத்தில் காவிரியில் கழிவு நீர் உள்ளிட்ட கழிவுகள் கலக்காமல் தடுக்க வேண்டும்’’ என அறிவுறுத்தியுள்ளனர்.