சேலம்/தருமபுரி: மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வரும் நீரின் அளவு விநாடிக்கு 1.85 லட்சம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நீர் வெளியேற்றம் எந்நேரத்திலும் மேலும் அதிகரிக்கப்படும் என்பதால், காவிரி கரையோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடரும் கனமழையால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து நேற்று மாலையில் 1.60 லட்சம் கனஅடியாக அதிகரித்தது. அணையில் 120 அடி உயரத்துக்கு நீர் தேங்கி இருப்பதால், அணைக்கு வரும் நீர் முழுவதும் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது. குறிப்பாக, அணையின் நீர் மின் நிலையங்கள் வழியாக, விநாடிக்கு 23,000 கனஅடியும், 16 கண் மதகு வழியாக 1.62 லட்சம் கனஅடியும் என மொத்தம் 1.85 லட்சம் கனஅடி நீர் நேற்று இரவு முதல் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனிடையே, மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வரும் நீரின் அளவு எந்நேரத்திலும் அதிகரிக்கப்படலாம் என்று நீர்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், காவிரி கரையோர மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும். அவர்களது உடமைகள், கால்நடைகள் உள்ளிட்டவற்றை பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வெள்ள அபாய எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று காலை விநாடிக்கு 1 லட்சத்து 35 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து மாலை 6 மணியளவில் 1 லட்சத்து 85 ஆயிரம் கனஅடி ஆனது.
கர்நாடகாவில் 2.12 லட்சம் திறப்பு: இதற்கிடையில், கர்நாடக மாநில அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு 2 லட்சத்து 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே, ஒகேனக்கல் காவிரியாற்றில் மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதால் காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி தருமபுரி மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், காவிரி கரையோர பகுதிகளை வருவாய் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்