இடுக்கி: கேரளாவில் நிலச்சரிவில் புதைந்த எஜமானர்களின் கடைசி உடல் கிடைக்கும் வரை, அவர்கள் வளர்த்த நாய் உடன் இருந்துள்ளது.
கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரமாக பெய்ததில் இடுக்கியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் குடயாதூர் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சோமன் என்பவரின் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை காணவில்லை. இவர்கள் மண்ணில் புதைந்திருக்கலாம் என கருதி இங்கு தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அப்போது ஒரு நாய் காலில் காயத்துடன், மீட்புக் குழுவினருடன் சேர்ந்து சுற்றியது. அந்த நாய் சோமன் குடும்பத்தினர் வளர்த்த நாய் என தெரியவந்தது. தன்னை வளர்த்த குடும்பத்தினர் யாராவது ஒருவர் உயிருடன் வரமாட்டர்களா என்ற ஏக்கத்தில் அந்த நாய் மீட்பு குழுவினருடன் சேர்ந்து சுற்றியது.
இறுதியில் மண்ணில் புதைந்து கிடந்த சோமன் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரின் உடல்களையும் மீட்புக் குழுவினர் மீட்டனர். இதனால் ஏமாற்றத்துடன் அந்த நாய் வேறு இடத்துக்கு சென்றதாக குடயாதூர் கிராம அதிகாரி ஜோதி தெரிவித்தார். நிலச்சரிவில் இருந்து தப்பிக்கும்போது அந்த நாயின் காலில் காயம் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. அதற்கு தேவையான சிகிச்சை மற்றும் பாதுகாப்பு அளிக்கப்படும் என கேரள விலங்குநல வாரிய உறுப்பினர் ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இடுக்கி மீட்புக் குழுவைச் சேர்ந்த ஏஞ்சல் என்ற மோப்ப நாயும், நிலச்சரிவு ஏற்பட்ட சில நிமிடங்களுக்குள் 2 உடல்களை மீட்க உதவியது. ஏஞ்சல் குறித்து அதன் பயிற்சியாளர் ஜான் கூறும்போது, ‘‘பயிற்சிக்குப்பின் மோப்ப நாய்களுக்கு கொடுக்கப்படும் முதல் பணியே தேடுதல் பணிதான். சோமன் மற்றும் சிஜி புதைந்திருந்த இடத்தை ஏஞ்சல் சரியாக அடையாளம் கண்டது. அதன்பின்பே அங்கிருந்து அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன’’ என்றார்.
இடுக்கி மீட்புக் குழுவில் உள்ள ஏஞ்சல் மற்றும் டோனா ஆகிய 2 மோப்ப நாய்களும் பெல்ஜியன் மேலானாய்ஸ் வகையைச் சேர்ந்தவை. நிலச்சரிவு மற்றும் இதர பேரிடரின் போது மண் மற்றும் இடிபாடுகளில் புதைந்தவர்களை இந்த நாய்கள் கண்டுபிடிக்கும் திறன் வாய்ந்தவை.
இதேபோல் பெட்டிமுடி என்ற இடத்திலும் நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு மண்ணில் புதைந்த தனுஷ்கா என்ற சிறுவனை, சம்பவம் நடந்த 4 நாட்களுக்குப் பின் மீட்புக் குழுவினர் கண்டுபிடிக்க குவி என்ற செல்ல நாய் உதவியுள்ளது. மீட்புப் படையினர் கவனத்தை கவர அந்த நாய் ஒரு குறிப்பிட்ட இடத்தை நோக்கி குரைத்தது. அங்கு மீட்புக் குழுவினர் தோண்டியபோது சிறுவன் உடல் கிடைத்தது.