சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று காலை சியான் விக்ரமின் கோப்ரா திரைப்படம் உலகம் முழுவதும் கோலாகலமாக வெளியானது.
சியான் விக்ரமுக்கு ரசிகர்கள் இல்லைன்னு யாருப்பா சொன்னது என வியக்க வைக்கும் அளவுக்கு ரசிகர்கள் FDFS காட்சியை முன்னிட்டு தியேட்டரில் பட்டாசுகளை வெடித்து தீபாவளியே கொண்டாடி விட்டனர்.
காரில் வந்தால் கூட்டம் கூடிவிடும் என்பதால், சைலன்ட்டாக ஆட்டோவில் வந்த சியான் விக்ரமின் மாஸ் என்ட்ரி வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.
வெளியானது கோப்ரா
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள கோப்ரா திரைப்படம் வெளியானது. ரசிகர்கள் கூட்டம் ஒவ்வொரு தியேட்டரில் அலைமோதும் அதிகாலை காட்சிகள் ட்விட்டர் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் ஷேர் செய்யப்பட்டு ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
பட்டாசு வெடித்து
சியான் விக்ரமின் கோப்ரா திரைப்படம் திரையிட்ட திரையரங்குகளில் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், செண்டை மேளம் முழங்கியும் ஆட்டம் பாட்டத்துடன் கோப்ரா முதல் நாள் முதல் காட்சியை திருவிழாவாக தியேட்டரில் கொண்டாடி வருகின்றனர். அதன் காட்சிகளையும் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.
ஆட்டோவில் வந்த விக்ரம்
தனது சொகுசு காரில் வந்தால் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து விடும் என்பதை உணர்ந்த சியான் விக்ரம் ரொம்ப சிம்பிளாக ஆட்டோவில் வந்து இறங்கினார். மாஸ்க் மற்றும் கேப் அணிந்து கொண்டு சியான் விக்ரம் ஆட்டோவில் வந்ததை அறிந்த ரசிகர்கள் அவரை பெருந்திரளாக சூழ்ந்து கொண்டனர்.
முதியவரை தூக்கி விட்டு
அந்த கூட்டத்தில் ரசிகர்கள் தள்ளியதால் முதியவர் ஒருவர் கீழே விழுந்து விட்டதை பார்த்த சியான் விக்ரம் உடனடியாக அந்த முதியவரை தூக்கி விட்ட காட்சிகளும் யூடியூப்களில் வெளியாகி வியூஸ்களை அள்ளி வருகின்றன. சியான் விக்ரமின் அந்த செயலை அவரது ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
துருவ் விக்ரம்
அப்பாவின் கோப்ரா படத்தை பார்க்க துருவ் விக்ரமும் சென்னையில் உள்ள பிரபல தியேட்டருக்கு விசிட் அடித்தார். அதன் காட்சிகளும் சோஷியல் மீடியாவில் வலம் வருகின்றன. மேலும், கோப்ரா படத்தின் நாயகி மிருணாளினி ரவி உள்ளிட்ட படக்குழுவினர் கோப்ரா படத்தின் FDFS காட்சியை பார்த்து வருகின்றனர்.