கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குள்பட்ட பகுதியில் யானை – காட்டெருமை – மான் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. இந்தப் பகுதியில், அண்மைக்காலமாக காட்டு யானைகளின் நடமாட்டம் என்பது அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குள்பட்ட கல்லாறு தூரிப்பாலம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காட்டு யானை ஒன்று நோய்வாய்ப்பட்ட நிலையில் ஆற்றில் தண்ணீர் குடிக்கும் வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் உடல் பலவீனத்துடன் காணப்படும் காட்டு யானை ஒன்று ஆற்றில் தண்ணீர் குடிக்க முடியாமல் அவதிப்பட்டு வருவது போல் தெரிகின்றது. குறிப்பாக கடந்த 17 நாள்களாக கோவை ஆனைகட்டி பகுதியில் நோய்வாய்ப்பட்ட யானையினை பிடித்து சிகிச்சையளிக்க வனத்துறையினர் திணறி வருகின்றனர்.
இந்நிலையில், தேடப்பட்டு வரும் யானை நேற்று முன்தினம் ஆனைகட்டி பகுதியில் வனத்துறையினர் கண்டதாக தெரிவித்தனர். தற்போது, அதே யானைதான் கல்லாறு வனப்பகுதியில் சுற்றித்திரியும் யானையாக இருக்கலாம் சந்தேகிக்கப்படுகிறது.
உடல் நலிவுற்ற அந்த யானையை பிடிக்கும் முயற்சிகள் தொடர்கின்றன.
செய்தியாள் பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”