இந்த நாஸ்டால்ஜியா தொடரில் சூப்பர் ஹிட் ஆன சினிமாக்களைத் தாண்டி, ‘வித்தியாசமான முயற்சி’யில் அமைந்த திரைப்படங்களையும் விகடன் வாசகர்கள் மீள்நினைவு கொள்ள விரும்புவார்கள் என்கிற நம்பிக்கையில் இந்தக் கட்டுரையை எழுதுகிறேன். அது மட்டுமல்லாது, தமிழில் நிகழ்ந்த வித்தியாசமான முயற்சிகளை சமகால தலைமுறைக்கும் அறிமுகப்படுத்துவது இதன் பிரதான நோக்கம். அது அவசியமும் கூட.
ஆம், அனந்து இயக்கத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ராதா, ரேகா, ஆனந்த்பாபு, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் வெளியான ‘சிகரம்’ திரைப்படத்தைப் பற்றித்தான் இந்த வாரம் பார்க்கப் போகிறோம். ‘ஐயோ.. இந்தப் படமா?.. சுத்த போர்” என்று சொல்பவர்களும் உண்டு. ‘ஒரு மாதிரி டிப்ரண்ட்டா, நல்லா இருந்தது’ என்று சிலாகிப்பவர்களும் உண்டு.
யார் இந்த அனந்து?
இன்றைய தேதியில் சினிமாத்துறைக்கு வெளியில் இருக்கும் சராசரி இளைஞர்கள் கூட உலக சினிமாவைப் பற்றி நிறைய பேசுகிறார்கள்; விவாதிக்கிறார்கள். ஆனால் எழுபது, எண்பதுகளில் அறிவுஜீவிகளின் குழுக்களில் மட்டுமே உலக சினிமா பரிச்சயமாகியிருந்தது. அவர்கள் வழக்கமான தமிழ் சினிமாக்களை சட்டையே செய்ய மாட்டார்கள். ‘நாய் கொண்டு வந்து போட்ட வஸ்து’ போலவே பார்ப்பார்கள்.
தமிழ் சினிமாவிற்கு உள்ளேயும் உலக சினிமா பற்றிய பிரக்ஞையுள்ள ஆசாமிகள் மிகக்குறைவாகவே அப்போது இருந்தார்கள். இதில் முக்கியமானவர் அனந்து. இயக்குநர் பாலசந்தரின் ஆரம்பக்காலத்தில் இருந்தே அவருடன் இணைக்கோடாக பயணித்தவர். பாலசந்தரின் வலதுகரம் என்று கூட சொல்லலாம். சர்வதேச அளவில் வெளியாகும் நல்ல சினிமாக்களைப் பற்றிய பரிச்சயமும் அவற்றின் நுட்பங்களை விவாதிக்கும் அறிவும் மற்றவர்களுக்கு தொடர்ந்து பரிந்துரைக்கும் ஆர்வமும் அனந்துவிற்கு இருந்தது.
கமல்ஹாசனின் சினிமா ஆளுமையை வடிவமைத்ததில் இவருக்கு முக்கியமான பங்கிருக்கிறது. எனவேதான் தன்னுடைய ‘Mentor’ என்று அனந்துவைப் பற்றிக் குறிப்பிடுகிறார் கமல். ‘ஹேராம்’ திரைப்படத்தை அனந்துவிற்கு சமர்ப்பணம் செய்யுமளவிற்கு தன்னுடைய ஆதர்ச நாயகனாக அவரை கருதுகிறார். தமிழின் மிகச்சிறந்த படமான ‘அவள் அப்படித்தான்’ வெளிவருவதற்கு முக்கியமான காரணமாக இருந்தவர் அனந்து. இது மட்டுமல்லாது அதன் திரைக்கதை உருவாக்கத்திலும் பங்களிப்பு செய்திருக்கிறார்.
கதாசிரியர், திரைக்கதையாசிரியர், வசனகர்த்தா, நடிகர் என்கிற பன்முகம் கொண்டவர் அனந்து. சினிமாத்துறையில் நீண்ட காலமாக இருந்தாலும் அவர் இயக்கிய ஒரே திரைப்படம் ‘சிகரம்’. இசைத்துறையில் ஜாம்பவனாக விளங்கும் ஒரு கலைஞன், தனிப்பட்ட சிக்கல்கள் காரணமாக அடையும் வீழ்ச்சியையும் பிறகு அவன் மீண்டெழுந்து வருவதையும் இயல்பான திரைமொழியில் சொல்லிய படம் இது.
‘அகரம் இப்போ சிகரம் ஆச்சு’….
இந்தப் படத்தின் படி எஸ்.பி.பி ஒரு சிறந்த இசையமைப்பாளர். (நிஜ வாழ்விலும்தான்!). அவரின் மனைவி ரேகா. இனிமையான இல்லறம். ஆனால் நிலவில் கறை மாதிரி அவரின் மகன் ஆனந்த்பாபு. குடிப்பழக்கத்தில் வீழ்ந்து தன்னையே மெல்ல அழித்துக் கொண்டிருக்கிறார். மகனின் நிலைமையைக் கண்டு பெற்றோர் மனம் புழுங்குகிறார்கள். ஆனந்த்பாபுவின் குடிப்பழக்கத்தின் பின்னால் எளிதில் எதிர்பார்க்கக்கூடிய ஒரு காரணம் இருக்கிறது. ஆம்,காதல் தோல்வி.
எஸ்.பி.பியின் மனைவி ஒரு விபத்தில் உயிர் இழக்கிறார். மனைவியின் மீது உயிரையே வைத்துள்ள இசையமைப்பாளர் மனம் உடைந்து போகிறார். மகனின் குடிப்பழக்கம் காரணமாக ஏற்கெனவே மனஉளைச்சலில் இருக்கும் அவருக்கு இந்த நிகழ்வும் சோ்ந்து கொள்ள பக்கவாதத்தினால் பாதிக்கப்படுகிறார். அவரது இசைப் பயணமே நின்று போகும் என்கிற நிலைமை.
எஸ்.பி.பியின் மருத்துவ சிகிச்சைக்காக ஒரு நரம்பியல் நிபுணர் வருகிறார். அவர் வேறு யாருமல்ல, எஸ்.பி.பியின் முன்னாள் காதலி ராதா. சில நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக அவர்களின் காதல் முறிந்து போயிருக்கிறது. எஸ்.பி.பியின் தற்போதைய நிலைமை, அவருடைய மகனின் போதைப் பழக்கம் ஆகிய இரண்டையும் கண்டு வருந்தும் ராதா, அதற்கான தீர்வுகளைத் தேடுகிறார்.
இசைக்கலைஞன் மீண்டெழுந்தானா.. மகன் திருந்தினானா.. அப்பா, பிள்ளை ஆகிய இருவருடைய இழந்து போன காதல் என்னவானது?.. என்பதற்கான இறுதி விடையை வசனமே இல்லாமல் பின்னணி இசை மட்டுமே கொண்டு அற்புதமான கிளைமாக்ஸில் கொண்டு சோ்த்திருக்கிறார் அனந்து.
எஸ்.பி. பாலசுப்பிரமணியம் – பாட்டும் பாவமும்
ஏற்கெனவே சில திரைப்படங்களில் சிறிய காட்சிகளில் வந்து போயிருந்தாலும், ஒரு பிரதான பாத்திரத்தில் எஸ்.பி.பியை முதன்முதலாக அறிமுகப்படுத்தியவர் பாலசந்தர். ‘மனதில் உறுதி வேண்டும்’ திரைப்படத்தில் ஒரு சுவாரசியமான மருத்துவர் பாத்திரத்தில் மிக இயல்பாக நடித்திருந்தார் எஸ்.பி.பி. ஆனால் இவரை ஹீரோவாக வைத்து படம் எடுக்க வேண்டுமென்றால் அந்த இயக்குநருக்கு அபாரமான நெஞ்சுரம் வேண்டும். அது இயக்குநர் வசந்திற்கு இருந்தது. ‘கேளடி கண்மணி’யின் ஹீரோ எஸ்.பி.பி வெற்றி பெற்றார். தனது திரைக்கதையின் மீது வசந்திற்கு இருந்த தன்னம்பிக்கைதான் இதற்கு காரணமாக இருக்கவேண்டும். இதனுடன் இளையராஜாவின் இசையும் இணைந்து கொள்ள ‘கேளடி கண்மணி’ சூப்பர் ஹிட் ஆயிற்று.
அனந்து இயக்கிய ‘சிகரம்’ திரைப்படத்தை ‘கேளடி கண்மணி’ திரைப்படத்தின் இன்னொரு பரிமாணம் எனலாம். ‘கேளடி கண்மணி’யின் கதையை எழுதியவரும் அனந்து என்பதால் இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. முதிராத வயதில் தன்னுடைய தந்தையின் இரண்டாம் திருமணத்தை தடுத்து நிறுத்தும் ஒரு சிறுமி, பிறகு பெரியவளான பிறகு தன்னுடைய காதலின் மூலம் தந்தையின் வலியை உணர்ந்து அவருடைய காதல் மீண்டும் பூக்க காரணமாக இருக்கிறாள். இதுதான் ‘கேளடி கண்மணி’ திரைப்படத்தின் ஒன்லைன்.
‘சிகரம்’ திரைப்படத்திலும் ஏறத்தாழ இதுவேதான் நிகழ்கிறது. காதல் தோல்வியினால் குடிப்பழக்கத்தில் வீழ்கிறான் மகன். மருத்துவ சிகிச்சை செய்ய வந்தவர், தந்தையின் பழைய காதலி என்பதை அறிந்து அவர்களை இணைத்து வைக்கிறான். இப்படியாக இரு திரைப்படத்திற்கும் சில ஒற்றுமை இருந்தாலும் தனது பிரத்யேக பாணியிலான இயக்கத்தின் மூலம் ‘சிகரத்தை’ இன்னொரு பரிமாணத்தில் சித்தரித்திருக்கிறார் அனந்து.
நடிப்பு என்பதை செயற்கையாகவோ, வலிந்து திணித்தோ, மிகையாகவோ செய்யாமல் சூழலுக்கு ஏற்ப ரியாக்ட் செய்தாலே போதும் என்பார்கள். தாமோதர் என்னும் இசைக்கலைஞனின் பாத்திரத்தில் மிக இயல்பாகப் பொருந்தியிருக்கிறார் எஸ்.பி.பி. ரேகாவின் மீதான காதலை ரொமான்ஸோடு வெளிப்படுத்துவதாகட்டும், மகனின் தீயபழக்கம் காரணமாக அவமானத்தால் புழுங்குவதாகட்டும், நோய்வாய்ப்பட்டிருக்கும் நிலையில் முன்னாள் காதலியை சந்திக்க நோ்வதாகட்டும், தன்னிடமுள்ள மெட்டுக்களை திருடும் சக இசையமைப்பாளரின் மீது பெருந்தன்மையை வெளிப்படுத்துவதாகட்டும், மீண்டும் இசை வாழ்க்கைக்கு திரும்பும் பரவசத்தை பதிவு செய்தாகட்டும்… மிக மிக இயல்பான நடிப்பைத் தந்திருக்கிறார். அழும் காட்சிகளில் மட்டும் கண்களைத் துடைத்து சமாளிக்கிறார்.
வயது மற்றும் தோற்றம் காரணமாக எஸ்.பி.பியின் ‘ரொமான்ஸ்’ காட்சிகளைக் காண்பது சற்று சங்கடமாக இருக்கிறது. ப்ளாஷ்பேக் காட்சிகளில் தலையில் டை அடித்து பென்சில் மீசை வைத்துக் கொண்டு அவர் வந்தாலும் நம்மால் முழுமையாக ஒட்ட முடியவில்லை. என்றாலும் எஸ்.பி.பி. என்னும் பாடகனின் மீதுள்ள அபிமானத்தால் இதை நாம் கடந்து விட முடிகிறது. அது மட்டுமல்லாது சுயபகடிகளின் மூலம் இதை திறமையாக மழுப்பி விடுகிறார் எஸ்.பி.பி.
ராதா – ஆனந்த்பாபு – ரேகா – சார்லி – நிழல்கள் ரவி – ரம்யா கிருஷ்ணன்
‘முதல் மரியாதை’ படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தவர் ராதா. தனது நடிப்பிற்கு இடம் தரும் பாத்திரம் என்றால் ஹீரோவின் வயதைப் பொருட்படுத்தாமல் அவர் நடிக்க முன்வருவது பாராட்டத்தக்க விஷயம். ‘சிகரம்’ திரைப்படத்தில் மிக கண்ணியமான நடிப்பைத் தந்துள்ளார், ராதா. எஸ்.பி.பியின் மீதுள்ள காதலை வெளிப்படுத்துவதும், திருமணத்திற்கு வற்புறுத்துவதும், பல வருடங்களுக்குப் பிறகு சந்திக்கும் போதும் கூட கடந்த கால கசப்புகளை மறந்து எஸ்.பி.பியின் குடும்ப நலனிற்காக உழைப்பதும் என சிறப்பான நடிப்பு.
எஸ்.பி.பியின் மனைவியாக ரேகா. தன்னுடைய கண்களாலேயே காதலை வெளிப்படுத்தி விடுகிறார். இவரை ஆனந்த்பாபுவின் அம்மாவாக கற்பனை செய்து பார்க்க சற்று கஷ்டமாக இருக்கிறது. அத்தனை இளமையான தோற்றம். காதலில் தோற்று குடிகார மகனாக இம்சைப்படுத்தும் பாத்திரத்தில் ஆனந்த்பாபு தன் பங்களிப்பை சரியாகத் தந்திருக்கிறார்.
ஒரு சராசரி படத்தின் தரத்திற்கு மேலாக இந்தத் திரைப்படம் பயணம் செய்தாலும் ஜனரஞ்சக அம்சத்திற்காக சார்லியின் பாத்திரமும் காமெடி டிராக்கும் இணைக்கப்பட்டுள்ளது. என்றாலும் அது கதையை ஒட்டியே நகர்கிறது. வாழ்நாள் பூராவும் கோரஸ் பாடும் பாடகர்களாகவே தங்களின் வாழ்க்கையை கழித்து விடும் பரிதாபமான இசைக்கலைஞர்களின் பிரதிநிதியாக சார்லி சிறப்பாக நடித்திருக்கிறார். தற்கொலை செய்து கொள்வதற்காக இவர் விதம் விதமாக முயல்வதும், அந்த முயற்சிகள் தோற்பதும், பிறகு உயிர்வாழ விரும்பும் சமயத்தில் எதிர் திசையில் சம்பவங்கள் நடப்பதும்.. என இயல்பான நகைச்சுவைக் காட்சிகள். இந்தப் பாத்திரத்திற்காக, தொண்டை கட்டியது போன்ற கம்மிய குரலை படம் முழுவதும் பயன்படுத்தியிருந்தார் சார்லி. இவரது காதலியாக லலிதா குமாரி நடித்திருந்தார்.
நிழல்கள் ரவியின் கேரக்ட்டர் சிறப்பாக எழுதப்பட்டிருந்தது. கெட்டவராகவும் இல்லாமல் நல்லவராகவும் இல்லாமல் சாம்பல் வண்ணத்தில் உள்ள பாத்திரம். எஸ்.பி.பி.யின் திறமை மற்றும் புகழ் மீது இவருக்கு பயங்கர பொறாமையும் வயிற்றெரிச்சலும் இருக்கும். அதே சமயத்தில் அவருடைய மேதமை மீது மரியாதையும் இருக்கும். எஸ்.பி.பி. நோய்வாய்ப்படும் போது உண்மையாகவே வருந்தி உதவிகள் செய்ய முன்வருவார். எஸ்.பி.பியின் டியூன்களை திருடிப் பயன்படுத்தி விட்டு பிறகு குற்றவுணர்ச்சியுடன் அழுது பாவமன்னிப்பு கேட்பார்.
‘அவள் அப்படித்தான்’ திரைப்படத்தின் ‘மஞ்சு’ பாத்திரத்தின் தொடர்ச்சியைப் போலவே ரம்யா கிருஷ்ணனின் கேரக்ட்டர் இருந்தது. அந்தப் படத்தின் திரைக்கதையிலும் அனந்துவின் பங்களிப்பு இருந்த விஷயத்தை முன்பே பார்த்தோம். காதல், திருமணம் போன்ற நிறுவனங்களில் நம்பிக்கையில்லாத முற்போக்கு மனோபாவம் உள்ள இளம்பெண் பாத்திரத்தில் நடித்திருந்தார் ரம்யா கிருஷ்ணன். இவரது அதிரடியான அணுகுமுறைகளால்தான் ஆனந்த்பாபுவின் காதல் முறிகிறது. ஆனால் ஓர் ஆன்மீகவாதியின் (டெல்லி கணேஷ்) உருக்கமான பேச்சில் மயங்கி தன்னைப் பறிகொடுத்து விடுவதும் தற்கொலைக்கு முயல்வதும் இந்தப் பாத்திரத்தின் வடிவமைப்பிற்கு முரணாக இருக்கிறது. பெண்ணியம் என்பதின் அடிப்படையைப் புரிந்து கொள்ளாமல் இருக்கும் பெண்களின் குழப்பமான மனநிலை மீதான விமர்சனமாக இந்தக் காட்சிகயை இயக்குநர் வைத்திருக்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.
எஸ்.பி.பி என்னும் சிறந்த இசையமைப்பாளர்
எஸ்.பி.பி. ஒரு சிறந்த பாடகர் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம். ஆனால் அவர் ஒரு மிகச்சிறந்த இசையமைப்பாளர் என்பது பரவலாக அறியப்படாத விஷயம். துடிக்கும் கரங்கள், மயூரி உள்ளிட்டு 45 திரைப்படங்களுக்கும் மேலாக இசையமைத்துள்ளார் பாலு. ‘சிகரம்’ திரைப்படத்திற்கும் இவரே இசை.
‘சிகரம்’ திரைப்படம் என்றாலே பலருக்கும் ‘வண்ணம் கொண்ட வெண்ணிலவே’ பாடல்தான் சட்டென்று நினைவிற்கு வரும். ஆனால் 15 பாடல்களைக் கொண்ட இந்த ஒட்டுமொத்த ஆல்பமே சிறப்பான படைப்பு எனலாம். அத்தனை நவரசங்களும் வெளிப்படுமாறு பல்வேறு உணர்ச்சிகளுக்கான பாடல்களை ஒரே ஆல்பத்தில் எஸ்.பி.பி. தந்துள்ளதை சாதனை என்றே சொல்ல வேண்டும். பாலமுரளி கிருஷ்ணா, ஜேசுதாஸ் முதல் மனோ, எஸ்.என்.சுரேந்தர் வரை நிறையப் பாடகர்களை இதில் பயன்படுத்தியுள்ளார். தானே சில பாடல்களை அருமையாகப் பாடியுள்ளார்.
இந்த ஆல்பத்தின் சிறப்பிற்கு வைரமுத்துவின் அற்புதமான பாடல்வரிகளையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். ஒவ்வொரு பாடலின் வரிகளிலும் வைரமுத்துவின் ஆழமான சொற்களும் உணர்வுகளும் பிரமிக்கத்தக்க அளவில் கலந்துள்ளன. ‘நீலத்தைப் பிரித்து விட்டால் வானத்தில் ஏதுமில்லை’ என்கிற வரி மறக்க முடியாதது. இது போல் பல அபாரமான வரிகள் இந்த ஆல்பத்தில் உள்ளன.
காதலியைத் தேடித் தவிக்கும் ஹீரோவின் உணர்வை இசையில் எப்படி கொண்டு வருவது என்று எஸ்.பி.பி போராடிக் கொண்டிருக்கும் போது அவரது மனைவியான ரேகா ‘பீலு ராகத்தில் முயற்சி செய்து பாருங்களேன்’ என்று சொல்ல, உற்சாகத்துடன் அதை நிகழ்த்திக் காட்டுவார். அதுவே அவருக்கு பல விருதுகளைத் தேடித் தரும். ‘வண்ணம் கொண்ட வெண்ணிலவே’ பாடலின் ஆரம்ப வரிகளைக் கவனித்தால், முகம்மது ரஃபி பாடிய ‘Kabhi Khud Pe Kabhi Haalaat Pe’ என்கிற இந்திப் பாடலின் சாயலை இருப்பதை கவனிக்க முடியும். “என் அடிமனதில் உறைந்திருந்த இந்தப் பாடல் தன்னிச்சையாக மேல் எழுந்து வந்திருப்பதை பிறகுதான் கண்டு கொண்டேன்” என்று சொல்லிச் சிரிக்கிறார் எஸ்.பி.பி. இந்தப் பாடலில் பல்வேறு மாயாஜாலங்களை நிகழ்த்தியிருப்பார் பாலு. அத்தனை ரகளையான இசைக்கோர்வைகள் வெளிப்படும்.
‘உன்னைக் கண்ட பின்புதான்’ என்பது இன்னொரு சிறந்த பாடல். இதை வெவ்வேறு ராகங்களில், தாளக்கட்டில் எஸ்.பி.பியும் சித்ராவும் தனித்தனி வடிவத்தில் அற்புதமாகப் பாடியிருப்பார்கள். ‘புலிக்குப் பிறந்தவனே’ என்பதை தமிழ்த் திரையிசையில் உருவான மிகச்சிறந்த தாலாட்டுப் பாடல்களில் ஒன்றாக சொல்லலாம். ‘அகரம் இப்போ சிகரமாச்சு’ என்பது இன்னொரு அட்டகாசமான பாடல். சாக்ஸஃபோன் ஒலிக்கும் இதன் ஆரம்ப இசையே அத்தனை அற்புதமாக இருக்கும். பாலுவின் வேண்டுகோளுக்கிணங்க ஜேசுதாஸ் இதை அருமையாகப் பாடித் தந்திருந்தார். ‘காட்டு மூங்கில் பாட்டுப் பாடும் புல்லாங்குழலாச்சு’ என்று இசையமைப்பாளரின் மறுவருகையை தன் சிறப்பான வரிகளில் பதிவு செய்திருந்தார் வைரமுத்து. படத்திலும் இந்தப் பாடல் காட்சி நன்கு பயன்படுத்தப்பட்டிருக்கும்.
‘இதோ.. இதோ.. என் பல்லவி’ என்பது இந்த ஆல்பத்தின் சிறந்த பாடல்களில் ஒன்று. பாலசுப்பிரமணியம் மற்றும் ராதா ஆகிய இருவரின் டைட் குளோசப் முகங்களின் வெவ்வேறு பாவங்களை சட்சட்டென்று மாற்றி அடுக்கிக் காட்டி சிறப்பாக உருவாக்கியிருப்பார் அனந்து. ‘பாஞ்சாலி கதறுகிறாள்’ என்கிற பாடலை பாலமுரளி கிருஷ்ணா அருமையாகப் பாடியிருந்தார். படத்தின் சூழலுக்கு ஏற்ப வந்து போகும் பாடல் இது. ‘ஜன்னலில்’ என்னும் பாடலை சிறப்பாகப் பாடியிருந்தார் சைலஜா. தாழ்ந்த குரலில் ஆரம்பிக்கும் இந்தப் பாடல், பிறகு நம்பவே முடியாத உயரத்தில் பயணிக்கும். ‘பெற்ற தாய்தனை’ என்கிற இன்னொரு பாடலையும் உணர்ச்சிகரமாகப் பாடியிருந்தார் சைலஜா.
மசாலா சினிமாவிற்கு ஏற்ற ஒரு குத்துப்பாடலை மனோ பாடுவது மாதிரியான காட்சியும் படத்தில் வரும். ‘இடுப்புக் குடங்கள்’ என்கிற இந்தப் பாடலை மனோ அசத்தலாகப் பாடியிருப்பார். ‘நித்தியத்தில் இருபேரும்’ என்பது வைரமுத்துவின் அட்டகாசமான ரொமாண்டிக் வரிகளில், பாலுவின் எளிமையான இசையமைப்பில் உருவான சிறந்த குறும்பாடல். எஸ்.என்.சுரேந்தர் மற்றும் சைலஜா பாடிய ‘முத்தமா..’ பாடலின் ஆரம்பம், ‘Happy Together’ (The Turtles – 1967) பாடலை நினைவுப்படுத்தும். இதே மெட்டின் சாயலை சங்கர் கணேஷூம் பயன்படுத்தியிருந்தார்கள். (‘தேவி கூந்தலோ பிருந்தாவனம்’).
நாசர் நடிக்கும் சண்டைக்காட்சிக்காக, பரபரப்பான பின்னணி இசை உருவாக்கப்படும் காட்சியும் படத்தில் வரும். படத்தின் கிளைமாக்ஸ், உருக்கமான வசனங்களோ, காட்சிகளோ ஏதுமின்றி பின்னணி இசையின் மூலமாகவே நமக்கு உணர்த்தப்பட்டு விடும். இந்த ஆல்பத்தின் பல பாடல்களை ஆடம்பரமான வாத்தியங்களோ, இசைக்கோர்வைகளோ அன்றி, எளிமையான வார்ப்புகளின் மூலமே கவரும்படி உருவாக்கியிருப்பது சிறப்பு. ஓர் இசையமைப்பாளராக பாலுவின் மேதமை அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும் ஆல்பம் என்று ‘சிகரத்தை’ உறுதியாகச் சொல்லலாம். படத்திலும் கூட பல காட்சிகளில் அர்த்தமுள்ள மௌனத்தை மட்டுமே பின்னணி இசையாகப் பயன்படுத்தியிருந்தார்.
‘சிகரம்’ ஏன் உச்சிக்குப் பயணிக்கவில்லை?
சிறப்பான திரைக்கதை மற்றும் உணர்வுபூர்வமான காட்சிகளின் மூலம் இந்தப் படத்தை உருவாக்கியிருந்தார் அனந்து. எஸ்.பி.பி. மற்றும் ரேகாவின் இனிமையான இல்லறத்தின் மூலம் ஆரம்பக் காட்சிகள் நகர்ந்தாலும், ஆனந்த்பாபு ஏன் குடியில் விழுந்திருக்கிறார் என்பது பிளாஷ்பேக் காட்சிகளின் மூலம் சொல்லப்படும். இதைப் போலவே எஸ்.பி.பி – ராதாவின் காதலும் பொருத்தமான இடத்தில் பிளாஷ்பேக் உத்தியில் சொல்லப்படும். படத்தின் ஆரம்பமும் முடிவும் ஒரே மாதிரியான காட்சியமைப்பின் மூலம் பதிவாகியிருப்பதும் அருமையான விஷயம்.
சிறுபத்திரிகையுலகில் மட்டுமே அறியப்பட்டிருந்த ‘ஆத்மாநாம்’ என்கிற கவிஞரின் கவிதையை தமிழ் சினிமாவில் கேட்க நோ்வதையெல்லாம் மிக அபூர்வமான நிகழ்வு என்றே சொல்லலாம். ‘எதையும் நிரூபிக்காமல் சற்று சும்மா இருங்கள்’ என்கிற ஆத்மாநாமின் கவிதையை, ராதா ஓரிடத்தில் மேற்கோள் காட்டுவார். இதைப் போலவே ஷெல்லியின் கவிதையை ஆனந்த்பாபு இன்னொரு இடத்தில் சொல்லுவார். ‘If You Meet the Buddha on the Road, Kill Him’ என்கிற புத்தகத்தைப் பற்றிய வசனமும் வரும். இவ்வாறாக படம் முழுவதும் அறிவுஜீவித்தனமான விஷயங்களையும் ஆங்காங்கே இணைத்திருந்தார் அனந்து.
‘சிகரம்’ திரைப்படத்தில் பல சிறப்பான விஷயங்கள் இருந்தாலும், உணர்வுபூர்வமாக சொல்லப்பட்டிருந்தாலும் அது ஏன் பார்வையாளர்களால் பெரிதாக வரவேற்கப்படவில்லை என்பது புதிரான விஷயம். ஜனரஞ்சகமான அம்சங்கள் பெரிதும் இல்லாதது, மிக மெதுவாக நகரும் திரைக்கதை போன்ற விஷயங்களால் அவர்கள் சலிப்படைந்திருக்கலாம். மிடில் சினிமாவிற்கும் கமர்சியல் சினிமாவிற்கும் இடையேயான பாதையை அடைவதற்கான தத்தளிப்பில் அனந்து பின்னடைவைச் சந்தித்தாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. உலக சினிமாவைக் கரைத்துக் குடித்த அனந்துவால் ஒரேயொரு திரைப்படத்தை மட்டுமே இயக்க முடிந்தது, அதுவும் ஒரு குறுகிய வட்டத்தை மட்டுமே சென்று அடைந்தது என்பதில் இளம் இயக்குநர்களுக்கான செய்தி உள்ளது.
எஸ்.பி.பியின் அருமையான இசையமைப்பு மற்றும் நடிப்பு, ரேகா, ராதா, ஆனந்த்பாபு உள்ளிட்டவர்களின் பங்களிப்பு, அனந்துவின் சிறப்பான இயக்கம் ஆகிய காரணங்களுக்காக இன்று பார்த்தாலும் ரசிக்கக்கூடிய, வித்தியாசமான அனுபவத்தை தரக்கூடிய படைப்பாக உள்ளது, ‘சிகரம்’.