சென்னை: இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தற்சமயம் படங்களை தயாரிப்பது நடிப்பது என்று பிசியாக இருக்கிறார்.
இன்று ரிலீஸ் ஆகியுள்ள கோப்ரா திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் இவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் சூர்யாவிற்கு நடந்த விபத்து பற்றி கூறியுள்ளார்.
ஆதவன்
மிகப்பெரிய கமர்சியல் இயக்குநராக கே.எஸ்.ரவிக்குமார் இருந்த அந்தக் காலகட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் தனது கம்பெனிக்காக ஒரு படம் இயக்க ஒப்பந்தம் செய்த போது நடிகர் சூர்யாவை வைத்து ஆதவன் என்கிற படத்தை மூவரும் துவங்கினார்கள். உதயநிதி அவர்களுக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் அந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்தப் படம் வசூலில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டானது.
கிராஃபிக்ஸ் முயற்சி
அப்போது கிராபிக்ஸ் தொழில்நுட்பம் தமிழ் சினிமாவில் நன்கு வளர்ந்து கொண்டிருந்தது. வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் பள்ளி மாணவனாக சூரியா நடித்த போது அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்தில் பள்ளியில் படிக்கும் சிறுவனாக காட்டலாம் என்று கிராபிக்ஸ் உதவியுடன் ரவிக்குமார் சில காட்சிகளை படம் பிடித்தார். அவருக்கு அது திருப்தியாக வரவில்லை என்றாலும் அப்போது அது மிகப் பிரபலமாக பேசப்பட்டது.
டைமிங் சென்ஸ்
நடிகர் வடிவேலு விற்கும் சூர்யாவிற்குமான நகைச்சுவை காட்சிகள் நன்கு வொர்க் அவுட் ஆகி இருந்தது. ஒரு கப்பலில் வடிவேலு மற்றும் ஆனந்த் பாபு பேசிக் கொண்டே வருகையில் கடைசியாக சத்யனை தூக்கி கடலில் வீசுமாறு காட்சி இருந்ததாம். தூக்கி எறிவது காட்டப்படாமல் அந்த ஷாட் முழுக்க முழுக்க சூர்யா மீது இருக்கும். அப்போது ரவிக்குமார் சொல்லவில்லை என்றாலும் சூர்யா சரியாக சத்யன் விழும் டைமிங்கிற்கு தனது அடியாட்களிடம் கண்ணை அசைத்து காட்டுவது போல் ரியாக்ட் செய்தாராம். அது கே.எஸ்.ரவிக்குமாரை வெகுவாக கவர்ந்ததாம்.
கிளைமேக்ஸ் ரிஸ்க்
இதே போல கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு கேபிளை அறுத்துக் கொண்டு மேலே சென்று அங்கிருக்கும் ஹெலிகாப்டரை பிடிப்பது போல ஒரு ஷாட் எடுக்கும் போது டூப் வைத்து எடுத்துக் கொள்ளலாம் என்று ரவிக்குமார் சொல்ல சூர்யா தானாகவே அதில் நடித்தாராம். ரோப் சொதப்பியதால் கீழே இருந்து வேகமாக ஹெலிகாப்டரை நோக்கி சென்ற சூர்யாவின் தலை கம்பியில் மோதுவது போல் இருக்க சமயோசிதமாக தலையை அவர் விலக்க அந்த கம்பியில் சூர்யாவின் தோள் சென்று வேகமாக இடித்ததாம். மேலே இடித்த சத்தம் கீழே தனக்கு கேட்டதாகவும் உடனே பதறிப் போய்விட்டதாகவும் நான்கு நாட்கள் அந்த வலியுடன் சூர்யா இருந்ததாகவும் ரவிக்குமார் கூறியுள்ளார். உங்களை நம்பி பலபேர் இருக்கிறார்கள். இனிமேல் இதுபோன்று ரிஸ்க் எடுக்காதீர்கள் என்று சூர்யாவிற்கு அறிவுரை கூறியதாகவும் அந்தக் காட்சியின் மேக்கிங்கை எண்ட் கிரெடிட்ஸ்ஸில் வைத்ததாகவும் ரவிக்குமார் அந்தப் பேட்டியில் கூறியிருக்கிறார்.