மதுரை ரயில் நிலையத்தில் ரயில் என்ஜின் இன்று (ஆகஸ்ட் 31) காலை திடீரென புரண்டது. இதனால் சிறிது நேரம் ரயில் நிலைய வளாகத்தில் பரபரப்பு நிலவியது. சென்னை செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் மதுரை வரை மின்சார என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது.
இந்த ரயிலுக்கு மதுரையில் டீசல் என்ஜின் மாற்றப்படுவது வழக்கம். அதுபோல இன்று அதிகாலை என்ஜின் மாற்றம் நடைபெற்றது. பொதிகை எக்ஸ்பிரஸ் மதுரையிலிருந்து வழக்கமான நேரத்திற்கு புறப்பட்டுச் சென்றது.
இந்த ரயிலில் இருந்து கழற்றப்பட்ட மின்சார என்ஜின் பின்புறமாக பார்சல் ஆபிஸ் அருகே நிறுத்த சென்றபோது மூன்று சக்கரங்கள் தடம் புரண்டன. தடம் புரண்ட இஞ்சினை சரி செய்வதற்காக காலை 07.25 மணி முதல் 20 நிமிடத்திற்கு மின் பாதையில் உள்ள மின்சாரம் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டது.
என்ஜின் தடம் புரண்டதால் திண்டுக்கல் மார்க்கத்தில் செல்ல வேண்டிய ரயில்கள் சிறிது காலதாமதமாக புறப்பட்டு சென்றன.
மதுரை – செகந்திராபாத் சிறப்பு ரயில் ஒரு மணி நேரமும், வைகை எக்ஸ்பிரஸ் 10 நிமிடமும், பழனி சிறப்பு ரயில் 9 நிமிடமும், தேனி சிறப்பு ரயில் 32 நிமிடங்களும் மதுரையிலிருந்து கால தாமதமாக புறப்பட்டன.
தடம் புரண்ட ரயில் என்ஜின் காலை 07.35 மணிக்கு சரி செய்யப்பட்டது. இதனால் மதுரை ரயில் நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
செய்தியாளர் செந்தில் குமார்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”