டெல்லி: இந்தியாவில் அதிகரித்து வரும் பணவீக்கத்தினை கருத்தில் கொண்டு மத்திய வங்கியானது தொடர்ந்து வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக பல்வேறு வங்கிகளும் வட்டி விகிதத்தினை அதிகரிக்க ஆரம்பித்துள்ளன.
இது ஒரு புறம் சேமிப்பாளர்களுக்கு நல்ல விஷயம் என்றாலும், மறுபுறம் கடனுக்கான வட்டி விகிதமும் அதிகரித்து வருகின்றது.
இதன் காரணமாக கடன் வாங்கியோர் அதிக வட்டி செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
செப்டம்பர் 1 முதல் அமல்
அந்த வரிசையில் தற்போது பேங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளர்களுக்கும் இனி கூடுதல் சுமை காத்துக் கொண்டுள்ளது எனலாம். ஏனெனில் பேங்க் ஆப் இந்தியா அதன் எம் சி எல் ஆர் (MCLR) வட்டி விகிதத்தினை செப்டம்பர் 1 முதல் அதிகரித்துள்ளது. இது அதன் கடனுக்கான விகிதத்தினை 5 -10 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது.
எவ்வளவு வட்டி?
பேங்க் ஆப் இந்தியாவின் இந்த முடிவால் இனி மாத தவணைத் தொகையானது அதிகரிக்கலாம். வங்கி இணையதள தரவின் படி, இவ்வங்கியின் ஓவர் நைட் விகிதம் 5 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து, 6.85% ஆக அதிகரித்துள்ளது. இதே ஆறு மாத எம் சி எல் ஆர் விகிதம் 10 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து, 7.45% ஆக அதிகரித்துள்ளது. இதே 1 வருட எம் டி எல் ஆர் விகிதம் 10 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து, 7.60% ஆக அதிகரித்துள்ளது.
மாற்றமில்லை
6 மாத எம் சி எல் ஆர் விகிதமானது மாற்றமின்றி 7.3% ஆக உள்ளது. இதே 3 மாத எம் சி எல் ஆர் விகிதமானது7.35% ஆக உள்ளது. இதே 3 ஆண்டுகளுக்கான எம் சி எல் ஆர் விகிதம் 7.80% ஆக அதிகரித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை
சமீபத்திய காலமாகவே வங்கிகள் தொடர்ந்து சேமிப்பு மற்றும் கடன்களுக்கான வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றன. இதற்கிடையில் ரிசர்வ் வங்கி இனி வரும் கூட்டத்திலும் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மே மாதம் 40 அடிப்படை புள்ளிகள் வட்டி அதிகரிக்கப்பட்ட நிலையில், ஜூன் மாதத்தில் 50 அடிப்படை புள்ளிகளும், ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் 50 அடிப்படை புள்ளிகளும் அதிகரிக்கப்பட்டு 5.4% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பணவீக்கம்
கடந்த ஏப்ரல் மாதத்தில் நாட்டின் பணவீக்க விகிதம் 7.79% ஆக இருந்தது. இதே மே மாதத்தில் 7.04% ஆகவும், ஜூன் மாதத்தில் 7.01% ஆகவுக் குறைந்துள்ளது. ஜூலை மாதத்தில் நுகர்வோர் விலை குறியீடானது 6.71% ஆகவும் இருந்தது. இது இன்னும் 2- 6% ஆக இருக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மாத தவணை அதிகரிக்கலாம்
எல்ஐசி ஹவுஸிங் பைனான்ஸ் மற்றும் பஜாஜ் ஹவுஸிங் பைனான்ஸ் – ம் வட்டி விகிதத்தினை 0.50% அதிகரித்துள்ளன. இதன் மூலம் இந்த நிதி நிறுவன வாடிக்கையாளர்களுக்கும் இனி மாத தவணை அதிகரிக்கலாம்.
Bank of india hikes overnight, 6 months, 1 year lending rates: EMIs May increase
Bank of india hikes overnight, 6 months, 1 year lending rates: EMIs May increase/செப்டம்,பர் 1 முதல் EMI அதிகரிக்க போகுது.. எந்த வங்கியில்.. யாருடைய பாக்கெட் காலியாக போகுது!