சைலண்ட் மோடில் இருந்து திடீரென விழித்த அன்னா ஹசாரே… கெஜ்ரிவாலின் தூக்கம் கலைக்க கடிதம்!

அன்னா ஹசாரே… பத்து ஆண்டுகளுக்கு முன் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட நபர். தமது உண்ணாவிரத போராட்டங்களின் மூலம் காங்கிரஸ் தலைமையிலான அப்போதைய மத்திய அரசை கதிகலங்க வைத்த காந்தியவாதி. ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளும் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளை மக்களே நேரடியாக தண்டிக்க வகை செய்யும் ஜன் லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்.

இவரது இந்த கோரிக்கையை மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய காங்கிரஸ் அரசு நிராகரித்ததையடுத்து, 2011 ஆம் ஆண்டு நாடு தழுவிய அளவில் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை துவக்கினார். இவரது போராட்டத்துக்கு அரவிந்த் கெஜ்ரிவால், பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி உள்ளிட்டோர் ஆதரவளித்தனர். டெல்லியில் துவங்கி சென்னை வரை பல்வேறு நகரங்களிலும் அன்னா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு பொதுமக்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்தது.

அன்னா ஹசாரேவின் போராட்டம் ஒருபறும், ,2ஜி ஊழல் குற்றச்சாட்டு, நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு, காமன்வெல்த் போட்டி முறைகேடு என பாஜக கையில் எடுத்த ஊழல், முறைகேடு குற்றச்சாட்டுகள் மறுபுறம் என காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு வசமாய் சிக்கித் தவிக்கும்படி ஆனது. இதன் விளைவாக 2014 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றியும் பெற்றன. அந்த தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததற்கு அன்னா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான போராட்டம் முக்கிய காரணமாக அமைந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனால் முன்னாள் ராணுவ வீரரான அன்னா ஹசாரேவின் போராட்டத்தின் பின்னணியில் ஆர்எஸ்எஸ் இயக்கம் இருக்கிறது. அவரை இயக்குவதே ஆர்எஸ்எஸ் தான் என அப்போது காங்கிரஸ் கட்சி பகிரங்கமாக குற்றம்சாட்டி வந்தது. இந்த குற்றச்சாட்டு சரிதான் என்பது போல் இருந்தது 2014க்கு பிறகு அன்னா ஹசாரேவின் நடவடிக்கைகள்.

2014 இல் மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற பின், ‘காங்கிரஸ் இல்லாத இந்தியா’ இந்த தமது ஒற்றை குறிக்கோளை அடைவதற்காக மத்தியப் பிரதேசம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி காங்கிரல் அல்லது அதன் கூட்டணி ஆட்சியை கவிழ்த்தது பாஜக.

அத்துடன், மகாராஷ்டிராவில் தமது கூட்டணி கட்சியான சிவசேனாவையே இரண்டாக உடைத்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி எம்எல்ஏக்களை உருவாக்கி, உத்தவ் தாக்கரேவை முதல்வர் பதவியில் இருந்து தூக்கியெறிந்துள்ளது பாஜக. தங்கள் கட்சி எம்எல்ஏக்களையும் விலைக்கு வாங்க பாஜக முயற்சிப்பதாக மதசார்பற்ற ஜனதா தள கட்சி தலைவரும் பிகார் முதல்வருமான நிதீஷ் குமாரும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் அண்மையில் பகிரங்கமாக குற்றமசாட்டி இருந்தனர்.

பாஜகவின் இதுபோன்ற ஜனநாயக விரோத போக்கை அன்னா ஹசாரே கண்டிக்காதது ஏன்? ஊழலுக்கு எதிராக உரக்க குரல் கொடுத்தவர் இப்போது எங்கே போனார்? என்ற கேள்வி கணை அவர் மீது தொடர்ந்து தொடுக்கப்பட்டு வருகிறது. இந்த கேள்விகெல்லாம் அசராத ஹசாரேவிடம், கார்ப்பரேட் பெரு நிறுவனங்களிடம் இருந்து கோடிக்கணக்கில் கட்சி நிதி பெறும் பாஜகவின் செயல் ஊழலுக்கு வழிவகுக்காதா? என்ற கேள்வி்க்கும் பதில் இல்லை.

இப்படி பாஜக என்றால் மட்டும் சைலண்ட் மோடில் போய்விடும் ஹசாரே, ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எழுதிய உள்ள கடிதம் மூலம், நீண்ட இடைவெளிக்கு பிறகு தேசிய அரசியலில் கவனத்தை பெற்றுள்ளார்.

‘மதுவுக்கு எதிராக புத்தகம் எழுதியுள்ள உங்களின் தலைமையிலான அரசின் மதுபான கொள்கை அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக உள்ளது எனவும், டெல்லியின் முதல்வரானதும் லோக்பால், லோக் ஆயுக்தாவை மறந்துவிட்டீர்களா?’ என்றும் கெஜ்ரிவாலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஹசாரே கேள்வியெழுப்பி உள்ளார்.

எங்க ரொம்ப நாளா ஆளையே காணோம் என்று கேட்கும் அளவுக்கு பொது வாழ்வில் இருந்து விலகி இருந்த ஹசாரே, இப்போது திடீரென விழித்து கொண்டு, ஆத் ஆத்மி அரசுக்கு எதிராக கேள்வி கேட்கிறார். இதுபோன்ற கேள்விகளை மத்திய பாஜக அரசை நோக்கி அவர் ஏன் கேட்பதில்லை என்பதே தேசிய அரசியலில் தற்போது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.