ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் முகாமிட்டுள்ள ஜார்க்கண்ட் மாநில எம்.எல்.ஏக்களுக்கு மாநில அரசின் காரில் மதுபானங்கள் விற்பனை செய்வதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு பெற்றது- மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானது என தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார் கூறியது. பாஜகவின் புகாரை விசாரித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையம், ஹேமந்த் சோரனின் எம்.எல்.ஏ. பதவியை பறிக்க பரிந்துரை செய்தது.
தேர்தல் ஆணையத்தின் பரிந்துரை மீது ஜார்க்கண்ட் ஆளுநர் நடவடிக்கை எடுத்தால் ஹேமந்த் சோரனின் முதல்வர் பதவி பறிபோகும். அப்படி ஒருநிலைமை உருவானால் மனைவியை முதல்வராக்க ஹேமந்த் சோரன் திட்டமிட்டுள்ளார்.
இதனிடையே தமது ஆதரவு எம்.எல்.ஏக்களை தக்க வைக்க முதலில் குந்தி பகுதியில் உள்ள ரிசார்ட்டுக்கு 3 பேருந்துகளில் அழைத்து சென்றார். அங்கு எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார் ஹேமந்த் சோரன். பின்னர் அங்கிருந்து ராஞ்சி திரும்பினார் ஹேமந்த் சோரன்.
இதனைத் தொடர்ந்து 40 எம்.எல்.ஏக்களுடன் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூருக்கு வருகை தந்துள்ளார் ஹேமந்த் சோரன். ராய்ப்பூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஹேமந்த் சோரன், அரசியலில் இது நடக்கும். எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார்.
இதனிடையே ராய்ப்பூரில் முகாமிட்டுள்ள ஜார்க்கண்ட் ஆளும் கட்சி எம்.எல்.ஏக்களுக்கு மதுபானங்கள் சப்ளை செய்யப்பட்டுள்ளன. இதற்காக சத்தீஸ்கர் மாநில அரசு வாகனனத்தில் மதுபானங்கள் கொண்டு செல்லப்பட்டன. இது தொடர்பான படங்களை பாஜக வெளியிட்டு சத்தீஸ்கரில் ஆளும் காங்கிரஸ் அரசை கடுமையாக விமர்சித்துள்ளது. ஜார்க்கண்ட்டில் முகாமிட்டுள்ள எம்.எல்.ஏக்களுடம் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் இணைய உள்ளனர்.