பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களுக்கு அருகே டாஸ்மாக் கடைகள் இயங்கக்கூடாது என சில கட்டுப்பாடுகள் தமிழ்நாட்டில் அமலில் வருகின்றன. ஆனால், விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய நகரமாக திகழும் திண்டிவனத்தில்… அரசு உதவிப்பெறும் பள்ளிக்கு 150 மீட்டருக்குள்ளாகவே டாஸ்மாக் கடை இயங்கி வருவது பற்றியும், பரபரபான பகுதியில் அமைந்திருக்கும் காவல் நிலையத்துக்கு எதிரிலேயே இயங்கும் டாஸ்மார்க் கடையால் மூச்சுமுட்ட குடித்துவிட்டு காவல் நிலைய வாசலிலேயே மதுப்பிரியர்கள் விழுந்து கிடப்பது பற்றியும் சுருக்கமாக, 13.07.2022 தேதியிட்ட ஜூனியர் விகடனின் `லோக்கல் போஸ்ட்’ பகுதியில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
ஜூனியர் விகடன் செய்தியின் எதிரொலியாக குறிப்பிட்ட இரு டாஸ்மாக் கடைகளையும் மூடும்படி சென்னை தலைமை அலுவலகத்திலிருந்து, மாவட்ட மேலாளருக்கு (DM tasmac) உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதனை அறிந்துகொண்ட ‘டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு’-வைச் சேர்ந்தவர்கள், மறுதினமே (12.07.2022) விழுப்புரம் மாவட்ட டாஸ்மாக் மேலாளரிடம்… ஜூ.வி செய்தியைக் குறிப்பிட்டு கோரிக்கை மனு ஒன்றை அளித்திருந்தனர். அந்த மனுவில், “திண்டிவனம் நகர பகுதியில் 19 வருடங்களாக இயங்கும் டாஸ்மாக் கடைகளை பற்றி ஜூனியர் விகடனில் தவறான செய்தி வந்திருக்கிறது. இந்த செய்தியின் அடிப்படையில் டாஸ்மாக் கடை 11,417 மற்றும் 11,618 ஆகிய இரண்டு கடைகளை டாஸ்மாக் நிர்வாகம் மூடுவதற்கு இருப்பதாக தகவல் அறிந்தோம். அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு திறக்கப்பட்ட கடைகளை மூட வேண்டாம்.
உரிய விசாரணை செய்து, இறுதி அறிக்கை கிடைக்கும் வரை தொடர்ந்து டாஸ்மாக் கடைகளை நடத்த அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும், ஒரு டாஸ்மாக் கடையை திறப்பது என்பது மிகவும் சிரமமான பணி, இந்த டாஸ்மாக் ஊழியர்களின் சிரமமான பணியை டாஸ்மாக் நிர்வாகம் வீணடிக்கிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, அந்த இரு டாஸ்மாக் கடைகளும் தொடர்ந்து இயங்கிய நிலையில், கடந்த 15 தினங்களுக்கு முன்பாக அதிரடியாக மூடப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக விசாரித்தபோது, “கடந்த 1 மாதங்களாக முன்பிலிருந்தே மதுபானங்கள் ஏதும் டாஸ்மாக்குக்கு வரவில்லை. இருப்பு இருந்ததை மட்டுமே விற்பனை செய்து வந்தனர். 15 தினங்களுக்கு முன்பு நிரந்தரமாக மூடிவிட்டனர்” என்றனர் டாஸ்மாக் கடையின் அருகில் வேலை செய்து கொண்டிருந்த நபர்கள் சிலர்.
பள்ளிக்கு மிக அருகில் இருந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் சற்று ஆறுதலை தந்திருக்கிறது. மேலும், காவல் நிலையம் அருகே வலப்புறம் உள்ள ஒரு மதுபானக்கடை மூடப்பட்டிருந்தாலும், காவல் நிலையத்திற்கு எதிரே உள்ள மதுபானக்கடை மூடப்படவில்லை. இந்நிலையில், இந்த இரு டாஸ்மாக் கடைகளை மூடியிருப்பது நிரந்தரமான நடவடிக்கையா? என அறிந்துகொள்ள விழுப்புரம் மாவட்ட டாஸ்மாக் அதிகாரி ராமுவிடம் பேசினோம்.
“இரு டாஸ்மாக் கடைகளையும் மேலிடத்திலிருந்து மூடச் சொன்னார்கள். இவர்கள் மூடாமல் விட்டுவிட்டனர். ஆரம்பத்திலே மூடியிருந்தாலாவது வேறு இடத்தில் மாற்றி வைத்திருந்திருக்கலாம். அது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்துகொண்டுள்ளது. முதலில் நிரந்தரமாக மூடச்சொல்லிதான் உத்தரவு வந்தது. தற்போது, அதனை மறு பரிசீலனை செய்து பேசி வருகிறோம்” என்றார்.