பொருளாதார அமைச்சகத்தின் இரண்டு அரசு ஊழியர்களை ஜேர்மன் உளவுத்துறையினர் விசாரணை
இந்த விவகாரத்தில் சிக்கிய இருவர் தொடர்பில் கருத்து தெரிவிக்க பொருளாதார அமைச்சகம் மறுப்பு
ரஷ்யாவிற்கு உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் பொருளாதார அமைச்சகத்தின் இரண்டு அரசு ஊழியர்களை ஜேர்மன் உளவுத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
குறித்த விவகாரம் தொடர்பில் உள்ளூர் உளவுத்துறை மற்றும் பெடரல் அலுவலகத்தின் முக்கிய அதிகாரிகள் தரப்பும் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
ஜேர்மன் பொருளாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் தங்கள் கவலையை பகிர்ந்து கொண்ட நிலையிலேயே தொடர்புடைய விசாரணை முன்னெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் இந்த விவகாரத்தில் சிக்கிய இருவர் தொடர்பில் கருத்து தெரிவிக்க பொருளாதார அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
பிப்ரவரியில் உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு விடையிறுக்கும் வகையில் ரஷ்யாவில் இருந்து எரிபொருள் இறக்குமதியை சார்ந்திருப்பதைக் குறைக்க ஜேர்மனி முடிவு செய்திருந்தது.
ஆனால் ரஷ்யா மீதான ஜேர்மனியின் புதிய கொள்கை மீது இரு அரசு ஊழியர்கள் அதிருப்தி தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.
இது சக அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், அவர்களை கண்காணிக்கவும் வழி வகுத்துள்ளது.
இந்த நிலையில், இருவரின் பின்னணியும் ஆய்வுக்கு உட்படுத்தியதில், ஒருவர் ரஷ்யாவில் பொருளாதாரம் பயின்றது கண்டறியப்பட்டுள்ளது.
இருவரும் ரஷ்யா மீது மிருதுவான நிலைப்பாட்டை கொண்டிருந்தனர்.
ஆனால் ரஷ்யாவுக்காக அவர்கள் உளவு மேற்கொண்டனர் அல்லது முறைகேட்டில் ஈடுபட்டனர் என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் இதுவரை சிக்கவில்லை என்றே அதிகாரிகள் தரப்பு குறிப்பிட்டுள்ளது.
மட்டுமின்றி, ரஷ்யாவை உள்ளடக்கிய தொடர் உளவு விவகாரங்களால் சமீப ஆண்டுகளில் ஜேர்மனி அதிர்ந்துபோயுள்ளது.
மிக சமீபத்தில், மேற்கத்திய ஆயுதங்கள் குறித்து ஜேர்மனியில் பயிற்சி பெறும் உக்ரேனிய வீரர்களை ரஷ்ய ரகசிய அமைப்புகள் உளவு பார்த்ததற்கான ஆதாரங்கள் ஜேர்மன் அதிகாரிகளிடம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஜேர்மன் இராணுவத்தில் ரிசர்வ் அதிகாரியாக பணிபுரியும் போது ரஷ்ய உளவுத்துறைக்கு தகவல் பகிர்ந்ததாக கூறப்படும் ஜேர்மானியர் ஒருவர் தற்போது விசாரணையில் உள்ளார்.
கடந்த ஆண்டு, பெர்லின் பூங்காவில் முன்னாள் செச்சென் தளபதியை பட்டப்பகலில் சுட்டுக் கொன்றதற்காக ஒரு ரஷ்ய நபருக்கு ஜேர்மன் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது, ரஷ்யாவின் உத்தரவின் பயரிலேயே குறித்த சம்பவம் அரங்கேறியதாக கொலை வழக்கை விசாரித்த சட்டத்தரணிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.