வாஷிங்டன்,
அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டி ஒன்றில் ஜெர்மனியின் ஆண்ட்ரியா பெட்கோவிக் ஸ்விட்சர்லாந்து நாட்டின் பெலிண்டா பென்சிக் உடன் மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஆண்ட்ரியா பெட்கோவிக் 2-6, 6-4, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறினார். இந்த நிலையில் இந்த தோல்வியை தொடந்து அவர் டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
34 வயதாகும் ஆண்ட்ரியா அதிகபட்சமாக இதற்கு முன் உலக தரவரிசையில் 9-வது இடம் வரை முன்னேறியுள்ளார். ஓய்வு முடிவு குறித்து ஆண்ட்ரியா கூறுகையில், “நான் மிகவும் நேசிக்கும் பெலிண்டா போன்ற வீராங்கனை உடன் எனது டென்னிஸ் பயணத்தை முடித்ததில் மகிழ்ச்சியடைந்தேன்.
என்னைப் பொறுத்தவரை நான் இன்னும் விளையாட்டை விரும்புகிறேன், இன்னும் விளையாட்டின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளேன். ஆனால் என்னால் நான் டென்னிஸ் விளையாட விரும்பும் விதத்தில் அதை விளையாட முடியவில்லை” என தெரிவித்தார்.