திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் குண்டு குழியுமாகக் கிடந்த தார்ச்சாலையில் செம்மண் கொட்டி பேஜ் ஒர்க் பார்த்த நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் மீது வாகன ஓட்டிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதியில் உள்ள முக்கிய சாலைகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வரும் பெய்து வரும் மழை காரணமாக சாலை முழுவதும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. மதுரை – கொடைக்கானல் முக்கியச் சாலையாகவும் திண்டுக்கல் – குமுளி தேசிய நெடுஞ்சாலையாகவும் உள்ள இச்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. இந்நிலையில் சேதமடைந்த சாலையில் அடிக்கடி விபத்து நிகழ்வதால் சாலையை உடனடியாக சீரமைக்க நெடுஞ்சாலைத்துறையிடம் வலியுறுத்தப்பட்டது.
இதனை அடுத்து அதிரடியாக சாலையை சீரமைக்க வந்த நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் ஒரு தள்ளு வண்டியில் செம்மண்ணை எடுத்து வந்து சாலையில் உள்ள பள்ளங்களில் கொட்டி விட்டு சென்றனர். ஜல்லி தார் கலவை கொண்டு பேஜ் ஒர்க் என்ற பணியை செய்யாமல் செம்மண்ணை கொட்டி விட்டு சென்ற நெடுஞ்சாலைத் துறையினரின் செயலால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். செம்மண் கலவை சில நாட்களுக்கு பின் பள்ளமாகி விபத்துக்கு வழிவகுத்துவிடும் என அச்சம் தெரிவிக்கும் வாகன ஓட்டிகள் குண்டும் குழியுமாக உள்ள சாலையை உரிய முறையில் சீர் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM