தியாகதுருகம் : தியாகதுருகம் புறவழிச் சாலையில் சிசிடிவி கேமராக்களின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால், தற்போது அவை காட்சிப் பொருளாக மாறிவிட்டன. கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே பிருதிவிமங்கலம் பிரிவு சாலையில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா செயலிழந்து காணப்படுகிறது. சென்னையில் இருந்து சேலம் மார்க்கமாக செல்லும் வழியில் தியாகதுருகம் பகுதி அமைந்துள்ளது.
இங்கு புறவழிச்சாலையில் விபத்துகள் அதிகம் நடக்கிறது. ஆகையால் விபத்து மற்றும் குற்றச்சம்பவங்களை கண்காணிக்க காவல்துறை சார்பில் தியாகதுருகம் பிரிவுசாலையில் நான்கு திசைகளிலும் தலா ஒரு சிசிடிவி கேமராஅமைக்கப்பட்டது. இதன்மூலம் சர்வீஸ் சாலையில் வாகனங்களை கண்காணிக்கும் பணி நடந்தது.
அதில் பதிவாகும் காட்சிகளை, காவல் நிலையத்தில் இருந்தபடி கண்காணிக்க அங்கு திரை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கண்காணிப்பு கேமரா இணைப்புகள் துண்டிக்கப்பட்டு 1 வருடத்திற்கும் மேலாகி விட்டது. ஆனால் இதுவரை அதனை சரி செய்யாததால் 4 கேமராக்களும் காட்சிப்பொருளாக மாறிவிட்டன.
இதனால், போக்குவரத்து பாதிப்பு, விபத்தை தெரிந்து கொள்ள முடியாமல் போலீசார் சிரமப்படுகின்றனர். மேலும், குற்றச்சம்பவங்களுக்கு வழிவகுக்கும் என்பதால், கண்காணிப்பு கேமராக்களை செயல்பாட்டுக்கு கொண்டு வர, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக
ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.