சேத்துப்பட்டு: ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அடுத்த கீரம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் முத்துராஜேந்திரன்(60), மளிகைக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி சாந்தி(52). இவர்களது மகன் அழகுவேல்ராஜ்(26). தேனி மாவட்டம், அச்சம்பத்து கிராமத்தில் வசித்து வந்த முத்துராஜேந்திரனின் தந்தை முத்துப்பாண்டியன் கடந்த மாதம் இறந்துவிட்டார். அவரது 30வது நாள் துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு மூவரும் காரில் திரும்பினர். இவர்களுடன் உறவினரான சகுந்தலாதேவி(22), வேலூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேர்முக தேர்வில் பங்கேற்பதற்காக வந்துள்ளார். நேற்று அதிகாலை 5 மணியளவில் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே வந்தபோது செஞ்சி நோக்கி சென்ற லாரியும், இவர்களது காரும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் முத்துராஜேந்திரன், சாந்தி, அழகுவேல் ராஜா ஆகியோர் இறந்தனர். சகுந்தலாதேவி படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.