சென்னை: அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளும், 2026-ம் ஆண்டுக்குள் குப்பையில்லா நகர தரமதிப்பீட்டில் 3 நட்சத்திர அந்தஸ்தை அடைவதற்காக ரூ.1,337.65 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
சென்னையில், திடக்கழிவு மேலாண்மை செயல்திட்ட பணிமனைகூட்டத்தை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று தொடங்கி வைத்தார். மேலும், மாநகராட்சி, நகராட்சிகளில் பொதுமக்கள் இணையதளம் வழியாக தங்கள் வரியை செலுத்தவும், புகார்களைத் தெரிவிக்கவும், ‘TN Urban இ-சேவை’ என்ற கைபேசி செயலி, ‘எழில்மிகு நகரம்’ எனும் மாத இதழையும் அமைச்சர் வெளியிட்டார். கூட்டத்துக்கு, நகராட்சி நிர்வாகத் துறை செயலர் சிவ்தாஸ் மீனா தலைமையேற்றார்.
கூட்டத்தில், அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளையும் இந்திய அளவில் குப்பை இல்லாத நகரமாகவும், 100 சதவீதம் அறிவியல்பூர்வமான திடக்கழிவு மேலாண்மை மேற்கொள்ளும் நகரங்களாகவும் மாற்ற அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
2026-ம் ஆண்டுக்குள் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளும் குப்பையில்லா நகர தரமதிப்பீட்டில் 3 நட்சத்திர அந்தஸ்தை அடைய ரூ.530.25 கோடி மாநில நிதி மற்றும் ரூ.807.40 கோடி மத்திய அரசு நிதி என ரூ.1,337.65 கோடியில் பல்வேறு உள்கட்டமைப்புகள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மக்கள் பங்கேற்புடன் ஒவ்வொருமாதமும் 2, 4-வது சனிக்கிழமையில் தீவிர தூய்மைப் பணிகள், விழிப்புணர்வு முகாம்கள் நடத்தும் பொருட்டு, ‘தூய்மை நகரங்களுக்கான மக்கள்இயக்கம்’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரிகளுடன் செப்.6-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு அனைத்து திட்டங்களையும் நிறைவேற்ற முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
காலியாக உள்ள அதிகாரிகள் பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதில் பேரூராட்சிகள் ஆணையர் செல்வராஜ், நகராட்சி நிர்வாக இயக்குநர் பா.பொன்னையா, நகராட்சி நிர்வாக இணை ஆணையர் பி.விஷ்ணுசந்திரன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.