சமீபத்தில் நடிகர் ஆமீர் கான் நடிப்பில் வெளியான லால் சிங் சத்தா படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவியது. எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இதனால் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதையடுத்து தயாரிப்பாளருக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பை எப்படி ஈடுகட்டுவது என்பது குறித்து ஆமீர் கான் ஆலோசித்து வருகிறார்.
இப்படத்திற்காக ஆமீர் கான் நான்கு ஆண்டுகள் தனது உழைப்பை கொடுத்திருக்கிறார். ஆனால் படம் தோல்வி அடைந்திருப்பது ஆமீர் கானை மிகவும் பாதித்துள்ளது. இதையடுத்து படத்தயாரிப்பாளருக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட தனது கட்டணத்தை ரத்து செய்ய ஆமீர் கான் முடிவு செய்துள்ளார். இது வரை இப்படத்தில் நடித்தற்காக ஆமீர் கான் பணம் எதுவும் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. அப்படியே ஆமீர் கான் தனது சம்பளத்தை தியாகம் செய்யும் பட்சத்தில் இப்படத்தை தயாரித்த நிறுவனத்திற்கு சொற்ப இழப்பே ஏற்படும் என்று கூறப்படுகிறது. படம் வெளியாவதற்கு முன்பே நெட்டிசன்கள் இப்படத்தை புறக்கணிக்கவேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தனர்.
இதனால் படம் வெளியாகி ஆரம்பத்தில் இருந்தே வசூலில் பின் தங்கியே இருந்தது. படம் தோல்வி அடைந்ததற்கு முழுக்க முழுக்க தானே காரணம் என்று ஆமீர் கான் தெரிவித்துள்ளார். ஆமீர் கானின் லால் சிங் சத்தா படத்துடன் அக்ஷய் குமார் நடித்த ரக்ஷா பந்தன் படமும் வெளியானது. இந்த படமும் தோல்வியையே சந்தித்துள்ளது. இப்படமும் வசூலில் சாதிக்கவில்லை. இரண்டு படத்தையும் புறக்கணிக்கவேண்டும் என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். இப்பட தோல்வியால் ஆமீர் கான் நடிப்பில் இருந்து சில காலம் ஒதுங்கி இருக்கவும் முடிவு செய்துள்ளார்.