பருத்தி விலை குறைந்த நிலையில் 20 நாளில் பஞ்சு விலை ரூ15 ஆயிரம் அதிகரிப்பு: வியாபாரிகள் வேதனை

சேலம்: பருத்தி விலை குறைந்த நிலையில், கடந்த 20 நாளில் ஒரு கேண்டி பஞ்சு ரூ15 ஆயிரம் வரை விலை உயர்ந்திருப்பதாக நூல் வியாபாரிகள் தெரிவித்தனர். சேலம் மாவட்ட நூல் வியாபாரிகள் சங்க தலைவர் ராசி.சரவணன் கூறியதாவது: தமிழகத்தில் சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஜவுளி உற்பத்தியாளர்கள், நூல் வியாபாரிகள் உள்ளனர். இந்த பகுதிகளில் நாள் ஒன்றுக்கு ரூ100 கோடி அளவுக்கு ஜவுளிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இத்தொழிலை நம்பி பல லட்சம் பேர் உள்ளனர். கடந்த மே மாதம் ஒரு கேண்டி விலை ரூ1.10 லட்சமாக அதிகரித்தது.

இந்த விலைக்கு நூல் வாங்கி ஜவுளி உற்பத்தி செய்தால் உற்பத்தியாளர்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்று பலர் உற்பத்தியை குறைத்து கொண்டனர். அதேபோல் நூல் மில்களிலும், மூன்றில் ஒரு பங்கு மட்டுமே நூல் உற்பத்தி நடந்தது. நூல் விலை உயர்வால் விசைத்தறி கூடங்கள் மூன்று ஷிப்டில் ஒரு ஷிப்ட் மட்டுமே நடந்தது. ஆர்டர் கொடுக்கும் வியாபாரிகளும் காட்டன் நூலுக்கு பதில் ரயான், பாலிஸ்டர் நூலில் ஜவுளியை உற்பத்தி செய்து கொடுக்குமாறு கேட்டனர். தற்போது ரயான், பாலிஸ்டர் நூல் 60 சதவீதம், காட்டன் நூல் 40 சதவீதம் கொண்டு ஜவுளி உற்பத்தி செய்யப்படுகிறது.

இதன் காரணமாக, கடந்த இரு மாதமாக பஞ்சு விற்பனை 20 முதல் 30 சதவீதம் சரிந்தது. இதனால் ஸ்டாக் வைத்திருப்போர் பஞ்சை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதன் காரணமாக பஞ்சு விலை படிப்படியாக குறைய தொடங்கியது. கடந்த ஆகஸ்ட் முதல் வாரத்தில் ஒரு கேண்டி பஞ்சு ரூ80 ஆயிரம் என சரிந்தது.  ஆனால் கடந்த 20 நாளில் ஒரு கேண்டிக்கு ரூ15 ஆயிரம் அதிகரித்து,  தற்போது ரூ95 ஆயிரமாக விற்கப்படுகிறது. அதேநேரத்தில் ஒரு கிலோ நூலுக்கு ரூ30 முதல் ரூ35 அதிகரித்துள்ளது. இந்த விலையேற்றத்தால் மீண்டும் ஜவுளி உற்பத்தி குறைந்துள்ளது. ஏற்கனவே எடுத்த ஆர்டர் மட்டுமே ஜவுளி உற்பத்தி நடந்து வருகிறது. உலகளவில் ஒரு கேண்டி பஞ்சு ரூ80 ஆயிரம் என விற்கப்படுகிறது.  

ஆனால், இந்தியாவில் மட்டும் ரூ95ஆயிரம் என விற்கப்படுகிறது. வரும் அக்டோபரில் புதிய பஞ்சு விற்பனைக்கு வர இருக்கிறது. எப்போதும் புதிய பஞ்சு விற்பனைக்கு வரும்போது, இருப்பில் உள்ள பஞ்சு விலை குறையும்.  அதற்கு நேர்மாறாக பஞ்சு விலை அதிகரித்து வருகிறது. பதுக்கல்காரர்கள் பஞ்சை பதுக்கி வைத்துக்கொண்டு செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தி விலையை  ஏற்றுகின்றனர்.  இந்த விலை உயர்வை தடுக்க வேண்டிய ஒன்றிய அரசு, கண்டும்  காணாமல் இருக்கிறது. பஞ்சு விலை ஒரே சீராக இருக்க  ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.