புதுடெல்லி: பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்கவும், அதன் கொள்முதலை இரட்டிப்பாக்கவும் ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இதுதொடர்பாக மாநில அரசுகளிடம் ஒன்றிய அரசு ஆலோசனை நடத்தியது. இந்தியாவில் வேளாண் பருவம் என்பது ஜூலை மாதம் தொடங்கி ஜூனில் நிறைவடைகிறது. இதில் கரீப் பருவம் ஜூன் மாதம் தொடங்கி அக்டோபர் மாதத்திலும், அக்டோபர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரையிலான காலம் ரபி பருவமாக உள்ளது. கரீப் பருவ சாகுபடி பணிகள் தென்மேற்கு பருவமழையை நம்பியும், ரபி பருவ விவசாய பணிகள் வடகிழக்கு பருவ மழையையும் சார்ந்து நடைபெறுகின்றன.
இந்த நிலையில் அடுத்தாண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டு கடைபிடித்தல், பருவநிலை மாற்றம், நெல் கொள்முதல் இலக்கு குறித்து ஒன்றிய அரசின் உணவுத்துறை அமைச்சகம் சார்பில் மாநிலங்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது எடுக்கப்பட்ட முடிவின்படி, வரும் 2022 – 2023ம் ஆண்டுக்கான கரீப் பருவத்தில் மாநிலங்களிடம் இருந்து மத்திய தொகுப்பிற்காக 518 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டு (2021-22) 510 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. கம்பு உள்ளிட்ட சிறுதானியங்களின் கொள்முதல் கடந்த ஆண்டு 6.3 லட்சம் டன்னாக இருந்த நிலையில், இந்த ஆண்டு 13.7 லட்சம் டன்னாக சிறுதானிய கொள்முதலை இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
மேலும் வேளாண் துறையில் இயந்திரமயமான கொள்முதல் நடவடிக்கைகளை மேற்கொள்வது, குறைந்த வட்டி விகிதத்தில் விவசாயிகளுக்கு கடன் வழங்குவது, கொள்முதல் நடவடிக்கைகளின் செலவைக் குறைப்பது, விவசாயத்தில்புதுமையான நுட்பங்களை ஏற்றுக்கொள்வது மற்றும் தரக்கட்டுப்பாட்டு முறைகளை கையாளுதல் குறித்து மாநில அரசுகளுடன் உணவு அமைச்சகம் ஆலோசனை நடத்தியது. வரும் 2023ம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக கடைபிடிக்கப்படுவதால், பருவநிலை மாற்றத்தின் காரணமாக சிறுதானிய கொள்முதலை ஒன்றிய அரசு இரட்டிப்பாக்கி உள்ளதாக ஒன்றிய உணவுத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.