பழநி: பழநி பகுதியில் வெளுத்து வாங்கிய கனமழையால் கொடைக்கானல் சாலையில் மண்சரிவு ஏற்பட்டு துண்டிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர். மேலடுக்கு சுழற்சி காரணமாக திண்டுக்கல் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு வானிலை ஆராய்ச்சி மையம் கனமழை எச்சரிக்கை விடுத்திருந்தது. பழநி பகுதியில் கடந்த 3 நாட்களாகவே மாலை நேரங்களில் மழை பெய்து வந்தது. நேற்றிரவு சுமார் 4 மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பழநி நகரில் உள்ள சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. முகூர்த்த நாள் என்பதால் திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகளுக்கு வந்த பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகினர். இரவு முழுவதும் பெய்த கனமழையால் பழநி-கொடைக்கானல் சாலையில் சவரிக்காடு அருகே மண்சரிவு ஏற்பட்டது.
இதனால் கொடைக்கானல் செல்லும் பாதை தற்காலிமாக மூடப்பட்டது. கொடைக்கானல் செல்லும் வாகனங்கள் பழநி அடிவாரத்திலேயே திருப்பி விடப்பட்டன. பழநி-கொடைக்கானல் இடைப்பட்ட பகுதியில் உள்ள கிராம மக்கள் போக்குவரத்து வசதியின்றி கடும் சிரமத்திற்குள்ளாகினர். சம்பவ இடத்திற்கு விரைந்த நெடுஞ்சாலைத்துறையினர் 200க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்டு போர்க்கால அடிப்படையில் மண்சரிவை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சீரமைப்பு பணி முடிவடையும் வரை சுற்றுலா வாகனங்கள் வத்தலக்குண்டு வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. கனமழை காரணமாக பழநி பகுதியில் உள்ள அணைகள் நிரம்பி தண்ணீர் அதிகளவு திறந்து விடப்பட்டுள்ளன. இதனால் ஆற்றின் கரையோர பகுதியில் உள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இன்று காலை நிலவரப்படி, 65 அடி உயரம் கொண்ட பாலாறு-பொருந்தலாறு அணையின் நீர்மட்டம் 63.50 அடியாக உள்ளது. வினாடிக்கு 2 ஆயிரத்து 356 கனஅடி நீர் வருகிறது. 2 ஆயிரத்து 47 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணை பகுதியில் பெய்த மழை அளவு 126 மில்லிமீட்டராக பதிவாகி உள்ளது. 67 அடி உயரமுள்ள வரதமாநதி அணை தனது முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. வினாடிக்கு 2 ஆயிரத்து 441 கனஅடி நீர் வருகிறது. வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. அணைப்பகுதியில் பெய்த மழை அளவு 78 மில்லிமீட்டராக பதிவாகி உள்ளது. 80 அடி உயரமுள்ள குதிரையாறு அணையின் நீர்மட்டம் 77.01 அடியாக உள்ளது. வினாடிக்கு 450 கனஅடி நீர் வருகிறது. வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. அணை பகுதியில் பெய்த மழையின் அளவு 105 மில்லிமீட்டராக பதிவாகி உள்ளது.