பாஜகவை அதன் பாணியிலேயே அடிக்கும் கெஜ்ரிவால்!

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காவிக் கொடியை பறக்க விட்டு பலம்வாய்ந்த அரசியல் சக்தியாக பாஜக உருவெடுத்துள்ளது. இதற்காக அக்கட்சி மேற்கொண்ட செயல்திட்டங்கள் ஏராளம். எட்டு ஆண்டுகளை கடந்து மத்தியில் அசுர பலத்துடன் பாஜக ஆட்சி செய்து வரும் நிலையில், 2024 தேர்தலிலும் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைக்கும் என அமித் ஷா சூளுரைத்துள்ளார். அதேசமயம், பாஜகவை வீழ்த்த பல்வேறு வியூகங்களையும் எதிர்க்கட்சிகள் வகுத்து வருகின்றன. ஆனால், அவை எதுவுமே இதுவரை பலனளிக்கவில்லை. மாறாக, பாஜகவின் வளர்ச்சிதான் அதிகரித்துக் கொண்டே வருகிறது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும் எனவும், அப்போதுதான் பாஜகவை வீழ்த்த முடியுமென்றும் பேசப்பட்டு வருகிறது.

இருந்தபோதும், பாஜகவுக்கே சவாலாக நிற்கிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். அக்கட்சியை அதன் பாணியிலேயே அரவிந்த் கெஜ்ரிவால் அடிப்பதால், அவரை சமாளிக்க முடியாமல் பாஜக திணறி வருவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். சமூக வலைதளங்கள் பாஜகவின் பலமாக பார்க்கப்படுகிறது. அதில், கடந்த 15 நாட்களாக ஆம் ஆத்மியின் செயல்பாடுகள் பாஜகவை விரக்தியடைய செய்துள்ளது.

டெல்லி மதுபான கொள்கை மீதான சிபிஐ ரெய்டுகள், ஆம் ஆத்மி கட்சியின் சிறப்பான கல்விக் கொள்கை பக்கம் திருப்பி விடப்பட்டுள்ளது. டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீதான ஊழல்வாதி என்ற பிம்பம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. மதுபான உரிமை விவகாரங்களில் சட்டவிரோதமாக தனியாருக்கு ஆதராவாக செயல்பட்டு முறைகேடில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படும் அவரை ஒரு ஊழல்வாதி என்று நம்புவதற்கு பெரும்பாலானவர்கள் இப்போது தயாராக இல்லை.

டெல்லி கல்விக் கொள்கை பற்றி நியூயார்க் டைம்ஸ் நாளிதழின் முதல் பக்கத்தில் செய்தி வெளியானது. அதில், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரது செயல்பாடுகள் பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது. இந்த செய்தி ஆம் ஆத்மி கட்சிக்கு புகழை தேடித்தந்துள்ளது. இதனை பணம் செலுத்தி போடப்பட்ட செய்தி என்று பாஜக குற்றம் சாட்ட, அதனை அந்த செய்தித்தாள் மறுத்திருந்தது. அது உண்மையான செய்தி அறிக்கை என அச்செய்தித்தாள் விளக்கம் அளித்தது. இது பாஜகவின் ஊடக நிர்வாகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய அடி. இதனையே தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தியது ஆம் ஆத்மி. நியூயார்க் டைம்ஸ் செய்தியின் விளைவாகவே ரெய்டுகள் ஏவப்பட்டதாகவும், ஆம் ஆத்மியின் புகழை பாஜகவால் சகித்துக் கொள்ள முடியவில்லை எனவும் சமூக ஊடகங்களில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இதுபோன்ற அரவிந்த் கெஜ்ரிவாலின் தெருமுனைத் தந்திரங்களால் பாஜக திகைத்து நிற்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலதிபர்கள் வாங்கிய ரூ.10 லட்சம் கோடி வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டை பாஜக மீது சுமத்தி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை முறையான பதில் அளிக்கும்படி கெஜ்ரிவால் தொடர்ந்து வலியுறுத்தினார். இதன் விளைவாக தள்ளுபடிகள் என்பது கடன்கள் திரும்பப் பெறப்படாது என்று அர்த்தமல்ல என்று நிர்மலா சீதாராமன் விளக்கம் அளிக்கும் அளவுக்கு சென்றர். மோடி அரசாங்கத்தை முறைப்படி எதிர்வினையாற்றுமாறு வலியுறுத்தும் கெஜ்ரிவாலின் திறன்கள், அவர்களை எரிச்சலடையவும், பதற்றமடையவும் செய்கிறது.

சமீபத்தில், டெல்லி சட்டமன்றத்தில் பேசுகையில், “தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களின் தொடர் கொலைகாரர்கள்” என்று பாஜகவை விமர்சித்தார். ‘ஆபரேஷன் லோட்டஸ்’ மூலம் இந்தத் தொடர் கொலையால் பாதிக்கப்பட்ட மத்தியப் பிரதேசம், கர்நாடகா, கோவா, மணிப்பூர், மேகாலயா, அருணாச்சலம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய அனைத்து மாநிலங்களின் பெயர்களையும் அவர் பட்டியலிட்டார்.

இதன் செயல்முறைகளை மிகவும் எளிமையாக விளக்கிய அவர், தலைக்கு 20 கோடி ரூபாய் வீதம் 270க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களை பாஜக விலைக்கு வாங்கியுள்ளதாகவும், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சிப்பதாகவும், மணீஷ் சிசோடியாவுக்கு முதல்வர் ஆசையை அக்கட்சி காண்பித்ததாகவும் குற்றம் சாட்டினார். தொழிலதிபர் நண்பர்களின் கடன்கள் தள்ளுபடிக்கு ஈடாக மத்திய அரசு வசூலிக்கும் பணம் இது என அவர் கூறுகிறார். பள்ளி ஆசிரியர் ஒரு சிக்கலான பாடத்தை எளிமையான எடுத்துக்காட்டுகளுடன் விளக்குவது போன்றது இது.

ஏதேனும் பிரச்ச்சினை வந்தால் இதேபோன்ற உத்திகளை பாஜகவும் கையாளும். உதாரணமாக, பொருளாதார வீழ்ச்சியை பற்றி பேசினால், அதற்கு நேருதான் காரணம் என்பார்கள். வேறு ஒரு மிகப்பெரிய குற்றச்சாட்டை கையில் எடுப்பார்கள். இதேபோல், தான் கார்னர் செய்யப்படும் போது மிகச்சிறப்பாக செயல்படுகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.

பாஜகவின் பிரசாரத்தை எப்படி எதிர்கொள்வது என்பதை ஆம் ஆத்மி விரைவில் கற்றுக்கொண்டிருக்கிறது. அத்துடன், ஆம் ஆத்மி புதிய கட்சி. எனவே, எதிர்க்கட்சிகளை ஊழல்வாதிகள், வாரிசு அரசியல், பரம்பரை கட்சி, சிறுபாண்மையினருக்கு எதிரான பிரசாரம் என பாஜக உருவாக்கி வைத்துள்ள எந்த டெம்ப்ளேட்டிலும் ஆம் ஆத்மி எளிதில் விழுந்து விடாது. இது பாஜகவுக்கு பெரும் சவாலாக உள்ளது.

டெல்லி தவிர பஞ்சாப் அரியணையை பிடித்துள்ள ஆம் ஆத்மி தேசியக் கட்சி என்ற அந்தஸ்தை நோக்கி நகர்ந்து வருகிறது. எதிர்வரவுள்ள குஜராத் தேர்தலிலும் பாஜகவுக்கு அக்கட்சி பெரும் சவாலாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. எனவே, குஜராத் எண்ட்ரியை தடுக்கும் வகையில், மதுபான கொள்கை சர்ச்சையைப் பயன்படுத்த மத்திய பாஜக அரசு முயற்சித்தது. ஆனால், இதற்கு நேர்மாறாக ஆம் ஆத்மி கட்சி இருக்கிறது. மணீஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ சோதனை நடத்திய பின்னர், கெஜ்ரிவாலும், சிசோடியாவும் குஜராத்தில் நிற்கிறார்கள். அங்கு தேர்தல் பிரசாரம் செய்கிறார்கள்.

கடந்த 8 ஆண்டுகளாக கடைபிடித்த உத்திகளை கெஜ்ரிவால் சிறப்பாக கடைப்பிடிக்கிறார். 2024 பொதுத் தேர்தல்கள் நெருங்கி வருவதால், மற்ற எதிர்க்கட்சிகள் பாஜகவை வீழ்த்துவது எப்படி என்று கற்றுக் கொள்ள எதிர்க்கட்சிகளுக்கு அரவிந்த் கெஜ்ரிவாலிடம் நிறைய இருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.