பாட்னா:பாஜ இல்லாத இந்தியா’வை உருவாக்க, எதிர்க்கட்சிகள் ஓன்றிணைய வேண்டும்,’ என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அழைப்பு விடுத்துள்ளார்.ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் சமீபத்தில் பாஜ கூட்டணியை முறித்து கொண்டார். காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளடன் இணைத்து, பீகாரில் புதிய ஆட்சியை அமைத்துள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜ.வை தோற்கடிப்பதற்காகன வியூகங்களை அவர் வகுத்து வருகிறார். இந்நிலையில், பாஜ.வுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வரும் தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ், பீகாருக்கு சென்று நிதிஷ் குமாரை நேற்று சந்தித்து பேசினார். அப்போது, கல்வான் பள்ளத் தாக்கில் சீன வீரர்களுடன் நடந்த மோதலில் வீரமரணம் அடைந்த பீகாரை சேர்ந்த 5 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினார்.
பின்னர், இருவரும் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது நிதிஷ் கூறுகையில், ‘தெலங்கானா தனி மாநிலம் உருவாக, தனி மனிதனாக போராடியவர் நீங்கள். நீங்கள் யார் என்பதை அவர்கள் (பாஜ) உணரவில்லை. வாஜ்பாய் மற்றவர்களை மரியாதையுடன் நடத்துவார். அது பழைய காலம். இப்போது இருப்பவர்களுக்கு விளம்பரம் மட்டும்தான் இலக்கு,’ என்று தெரிவித்தார். சந்திரசேகர ராவ் கூறுகையில், ‘பாஜ.வால் நாட்டில் ஏராளமான தீமைகள் நடக்கின்றன. திறமையான இந்தியர்கள் வெளிநாடு செல்வதுபோல், இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டு மூலதனங்கள் வெளியேறி கொண்டிருக்கின்றன. பாஜ இல்லாத இந்தியாவை உருவாக்க, எதிர்க்கட்சிகள் ஒன்று சேர வேண்டும்,’ என தெரிவித்தார்.