புதுடில்லி : உத்தர பிரதேசத்தின் அயோத்தியில், 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணை வந்தது.அப்போது அமர்வு உத்தரவிட்டதாவது:உச்ச நீதிமன்றத்தில் அளித்த உறுதியை மீறி, பாபர் மசூதி இடிக்கப்பட்டது
தொடர்பாக, இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. வழக்கை தாக்கல் செய்தவர், 2010ல் உயிரிழந்து விட்டார்.இந்த விவகாரம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, 2019ல் இறுதி தீர்ப்பு அளித்துள்ளது.அதனால், இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தற்போதைய சூழ்நிலைக்கு பொருந்தாது. இந்த வழக்கை முன்னதாகவே விசாரித்திருக்க வேண்டும். ஆனால், பல காரணங்களால், 30 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்துள்ளது.ஏற்கனவே உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பு அளித்துள்ளதாலும், இந்த வழக்கைத் தொடர்ந்த மனுதாரர் இறந்து விட்டதாலும், இந்த வழக்கு இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது.இவ்வாறு அமர்வு உத்தரவிட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement