புதுச்சேரி: ‘விவசாயிகளின் பயிர்க்கடன் ரூ.13.8 கோடி தள்ளுபடி செய்யப்படும், கூட்டுறவு சர்க்கரை ஆலை விரைவில் தனியார் பங்களிப்புடன்திறக்கப்படும்’ என முதல்வர் ரங்கசாமி சட்டசபையில் அறிவித்தார்.
சட்டசபையில் நேற்று பட்ஜெட் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எம்.எல்.ஏ.,க்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து, முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:
எம்.எல்.ஏ.,க்களின் கருத்துக்களை கவனத்தில் எடுத்துக் கொள்வோம். நிர்வாகத்தில் கடந்த காலத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் தொடர்கிறது. அதனை களைந்து, புதுச்சேரியை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுவர வேண்டும் என்பதே அரசின் எண்ணம்.
எம்.எல்.ஏ.,க்களின் கோரிக்கைகள் அனைத்தையும் செய்ய முடியுமா என்பதை பார்க்க வேண்டும். முழுமையாக நிறைவேற்றவில்லை என்றாலும், எம்.எல்.ஏ.,க்கள் திருப்தி அடையும் வகையில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். மார்ச் மாதத்தில் பட்ஜெட் தாக்கல் செய்து, கூட்டத் தொடரை அதிக நாட்கள் நடத்திட வேண்டும் என்றனர். வரும் காலங்களில், மார்ச் மாதத்தில் பட்ஜெட் தாக்கல் செய்திட வேண்டும் என்பதே அரசின் எண்ணம். மத்திய அரசும் இதை அறிவுறுத்தி உள்ளது. நிச்சயம் மார்ச் மாதத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடத்தப்படும்.
அதிகாரிகளுக்கு வேண்டுகோள்
மத்திய அரசிடம், மாநிலத்திற்கு கூடுதல் நிதி கேட்டுள்ளோம். இந்தாண்டிற்கான நிதியை வரும் டிசம்பர் மாதத்திற்குள் முழுமையாக பயன்படுத்தினால் கூடுதல் நிதி தர எண்ணம் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.எனவே, தலைமைச் செயலர், செயலர்கள், அதிகாரிகள் கோப்புகளில் கவனம் செலுத்தினால், மாநிலம் வளர்ச்சி அடையும். தேவையற்ற கேள்விகள் கேட்டு காலம் கடத்தாமல், தேவையான கேள்விகளுக்கு மட்டும் பதில் பெற்று விரைவாக செயல்பட்டால் மாநிலம் வளர்ச்சி பெறும்.கடந்தகால குறைகளை மறந்து வளர்ச்சியில் அக்கறை கொண்டு அதிகாரி கள் பணியாற்ற வேண்டும். அனைவரும் நல்ல வளர்ச்சி காண வேண்டும்.
புதிய சட்டசபை
புதுச்சேரி சட்டசபை பழமையான கட்டடத்தில் இயங்குகிறது. புது கட்டடம் எங்கு கட்டுவது என ஆலோசிக்கப்பட்டு வருகிறது. விரைவில் கட்டுமான பணி தொடங்கும்.பத்தாண்டு பணி முடித்தவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். பல மாதம் சம்பளம் இல்லாத நிலை போக்கப்படும். வேளாண் துறையை பொறுத்தமட்டில் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றுவோம். குறைந்த நிலப்பரப்பில் அதிக பலன் கிடைக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
பயிர்க்கடன் தள்ளுபடி
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் கடந்த நிதியாண்டு வரை பெற்ற பயிர்க்கடன் ரூ.13.80 கோடி தள்ளுபடி செய்யப்படும்.கூட்டுறவு சங்கங்கள், லிங்காரெட்டிப் பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் பிற கூட்டுறவு நிறுவனங்கள் சிரமமான நிலையில் உள்ளன. சர்க்கரை ஆலையில் எத்தனால் பிளான்ட் அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்த்தனர். தற்போது ஒப்புக் கொண்டுள்ளனர். அதனால், தனியார் பங்களிப்போடு, எத்தனால் ஆலையுடன் சர்க்கரை ஆலை விரைவில் திறக்கப்படும்.
ரூ.30 கோடி ஒதுக்கீடு
நல்ல நிலையில் சேவை செய்த அமுதசுரபி, கான்பெட், பாண்டெக்ஸ் நிறுவனங்கள் தற்போது சம்பளம் தர முடியாத நிலையில் உள்ளன. இவற்றை மீண்டும் செயல்படுத்த ரூ.30 கோடி நிதி ஒதுக்கித் தரப்படும்.சுதேசி, பாரதி மில்கள் நலிவடைந்துள்ளன. அதன் தொழிலாளர்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.பட்ட மேற்படிப்பிற்கு காமராஜர் கல்வி உதவித் தொகை வழங்கப்படும். மஞ்சள் ரேஷன் கார்டுதாரர்களுக்கும் மருத்துவக் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும். எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் தொகுதியை கண்காணித்திட கண்காணிப்பாளர் நிய மனம் செய்யப்படுவர்.
மீனவர்களுக்கு டீசல் மானியம்
மரபணு குறைபாடு உள்ள குழந்தைகள் பராமரிப்புக்காக மாதம் ரூ.1,000 வழங்கப்படும். என்.ஆர்.எச்.எம். ஊழியர் கள் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க ஊழியர்களை நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.மீனவர்களுக்கு டீசல் மானியம் லிட்டருக்கு ரூ.12 வழங்கப்படும். கட்டட நல வாரியத்தில் வழங்கப்படும் திருமண உதவித்தொகை, ஈமச்சடங்கு தொகை ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்படும்.
ஆட்டோ டிரைவர் நல வாரியம்
மகப்பேறு உதவித் தொகை ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும். மருத்துவ உதவித்தொகை ரூ.500ல் இருந்து ரூ.2,000 ஆகவும், இருதய அறுவை சிகிச்சைக்கு ரூ.ஒரு லட்சமும், சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். கட்டடத் தொழிலாளர் நல வாரிய பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை ரூ.500 உயர்த்தி வழங்கப்படும். ஆட்டோ டிரைவர் நல வாரியம் அமைக்கப்படும். முதியோர் உதவித்தொகை பெறுபவர்களில் 70 முதல் 80 வயதிற்கு உட்பட்டோ ருக்கு ரூ.500 உயர்த்தி ரூ.3,000 ஆக வழங்கப்படும்.
துப்புரவு பணியாளர்கள் இனி, துாய்மை பணியாளர்கள் என அழைக்கப்படுவர். நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு சம்பளம் அரசே வழங்க வேண்டி உள்ளது.இதுகுறித்தும், உள்ளாட்சி அமைப்புகளின் வருவாயை பெருக்குவது குறித்தும் குழு அமைத்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.எனவே, அவர்கள் போராட்டத்தை திரும்பப் பெற வேண்டும்.ரேஷன் கார்டிற்கு இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை வழங்கினால் மட்டுமே ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியும் என்ற நிலை உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்