புதுடில்லி : பெங்களூரில் உள்ள, ‘ஈத்கா’ மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட உச்ச நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது. கர்நாடகாவில், முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பெங்களூருவின் சாம்ராஜ்பேட்டையில் உள்ள ஈத்கா மைதானம் யாருக்கு சொந்தம் என்பது குறித்து, வக்போர்டுக்கும், மாநில வருவாய்த் துறைக்கும் இடையே பிரச்னை எழுந்தது.
ஈத்கா மைதானம் வருவாய்த் துறைக்கே சொந்தம் என மாநகராட்சி அறிவித்தது. இதையடுத்து, சமீபத்தில் இந்த மைதானத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அரசுக்கு சொந்தமான நிலம் என்பதால், இங்கு விநாயகர் சதுர்த்தியை கொண்டாட ஹிந்து அமைப்புகள் அனுமதி கோரின. இதற்கு வக்போர்டு எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், ‘ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கு அனுமதி அளிப்பது குறித்து மாநில அரசு பரிசீலித்து உத்தரவிடலாம்’ என தீர்ப்பளித்தது.
இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு சென்றது. இதை விசாரித்த நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு, ‘ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி இல்லை.’நில விவகாரம் தொடர்பான பிரச்னைக்கு தீர்வு காண, சம்பந்தப்பட்டவர்கள் உயர் நீதிமன்றத்தை அணுகலாம். அதுவரை தற்போதுள்ள நிலையே தொடரும்’ என உத்தரவிட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement