மருமகளை வீட்டை விட்டு வெளியேற்றிய உத்தரவு ரத்து: உயர் நீதிமன்ற கிளை அதிரடி!

மருமகளிடம் இருக்கும் வீட்டை மீட்டு மாமனார்,மாமியாரிடம் ஒப்படைக்க காவல்துறைக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை சூர்யா நகரைச் சேர்ந்த காயத்ரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், “நான் மதுரை சூர்யா நகரை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரை திருமணம் செய்து அவருக்கு சொந்தமான இல்லத்தில் குடியிருந்து வருகிறேன். இந்நிலையில் எனது கணவரின் தந்தை அம்பிகாபதி மற்றும் எனது கணவர் அவர்களது குடும்பத்தினர் ஒன்றாக இணைந்து கொண்டு எனக்கு பல்வேறு இடையூறுகளை செய்து வந்தனர்.

இந்நிலையில் எனது மாமனார் அம்பிகாபதி மாமியார் இணைந்து முதியோர் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு விதிகளின்படி மாவட்ட முதியோர் பாதுகாப்பு அதிகாரியிடம் (DRO) நான் எனது மாமனார் மாமியாரை துன்புறுத்துவதாக மனு செய்து எனக்கு எதிராக உத்தரவு பெற்றுள்ளனர்.

அந்த உத்தரவில், காவல்துறை உதவியுடன் என்னை வீட்டை விட்டு வெளியேற்றி வீட்டை மீட்டு மாமனார் மாமியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.” என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், மாவட்ட முதியோர் பாதுகாப்பு அலுவலர் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது முதியோர் பாதுகாப்பு படி மருமகளை வீட்டை விட்டு வெளியேற்ற முடியாது எனவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நீதிபதி, மூத்த குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டம் 2007 விதியின்படி மூத்த குடிமக்களான மாமனார் மற்றும் மாமியாருக்கு மருமகள் நேரடியான உறவோ வாரிசோ கிடையாது. எனவே, இந்த சட்டம் மருமகளுக்கு பொருந்தாது என கூறி மருமகளை வீட்டை விட்டு வெளியேற மாவட்ட வருவாய் அலுவலர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.