ஸ்ரீநகர்: சிறப்பு சட்டம் நீக்கப்பட்டதை தொடர்ந்து, முதலீட்டு மையமாக ஜம்மு காஷ்மீர் மாறி வருகிறது. பாரம்பரிய வணிகத்தில் மட்டும் ஈடுபடாமல், புதிய தொழில்களை துவக்குவதில் ஆர்வம் காட்டும் அம்மாநில இளைஞர்கள், நாட்டிற்கு முன்மாதிரியாக திகழ்கின்றனர்.
அந்த வகையில், ரமீஸ் ராஜா என்ற இளைஞர், கந்தர்பால் மற்றும் கங்கன் பகுதியில் சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக மண்ணை கொண்டு வீடுகளை கட்டியுள்ளார். அந்தந்த பகுதிகளில் கிடைக்கும் பொருட்களை கொண்டு இதுவரை 3 வீடுகளை கட்டி முடித்துள்ளார். இந்த முயற்சி சிறந்தது எனக்கூறும் அவர், அழகாக கட்டப்பட்ட வீடுகளுக்கு குலும் மண் வீடுகள் என பெயர் சூட்டியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், இங்கு வரும் சுற்றுலா பயணிகள், உள்ளூர் கலாசாரம் பிரதிபலிப்பதை விரும்பினர். அதில் இருந்து கிடைத்த யோசனையின்படி, இந்த திட்டத்தை துவக்கினேன் என ராஜா கூறினார்.
சோனி கிலானி என்ற மற்றொரு இளம் தொழில் முனைவோர், பிரிட்டனில் படிப்பை முடித்து விட்டு காஷ்மீர் திரும்பியதும், சொந்த ஊரில், ஆடை அலங்காரம் செய்யும் நிறுவனம், கப் கேக் பேக்கரி மற்றும் மிட்டாய்கடையை திறந்துள்ளார். இந்த முயற்சி தேசிய அளவில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலும் பலரின் கவனத்தை எட்டியுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர், காஷ்மீர் தொழில்முனைவோர் மாநாட்டின் போது, அங்கு தொழில் துவங்குவதற்கு 500 விண்ணப்பங்களை பெற உள்ளதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து காஷ்மீர் வணிக மற்றும் தொழில் சேம்பர் தலைவர் ஷேக் ஆஷிக் அகமது கூறுகையில், இளைஞர்கள், புதிய முயற்சிகளில் ஈடுபடுத்த விரும்புகிறோம். இதன் மூலம் அவர்கள் எப்போதும் ‘பிஸி’யாகவே இருப்பார்கள் என்றார்.
ஜம்மு காஷ்மீரில் வெளிநாட்டினர் முதலீடு செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது முதல், நேர்மறையான செய்திகள் வந்து கொண்டுள்ளன. மார்ச் மாதம் ஐக்கிய அரபு எமீரேட்சை சேர்ந்த முதலீட்டாளர்கள் காஷ்மீர் வந்தனர். அவர்கள் உள்ளூர் வணிகர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இதனிடையே, காஷ்மீர் இளைஞர்களிடையே ஆக்கப்பூர்வமான சிந்தனை ஏற்படுவதற்கு அங்கு சில திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
அதில், ஹிமாயத் திட்டத்தின்படி, 18 முதல் 35 வயதுள்ள 10 ஆயிரம் இளைஞர்களுக்கு பயிற்சி மற்றும் ஆதரவு அளிப்பது. இந்த திட்டத்தின்படி சொந்த தொழில் துவங்கும் ஆர்வம் கொண்டவர்களுக்கு நிதியுதவி அளிக்கப்படும்.
தேஜஸ்வினி திட்டத்தின்படி 18 முதல் 35 வயதுள்ள இளம்பெண்களுக்கு சுயதொழில் செய்ய வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்படும். உள்ளூர் சூழ்நிலைக்கு ஏற்ப பேஷன், பேக்கரி, காதிகிராப்ட், கைத்தொழில் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்படும்.
காஷ்மீரில் உள்ள தொழில் முனைவோர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றம் தேசிய அளவில் பிரதிபலிக்கிறது. இதன் மூலம், இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டில் இருந்த 5.3 சதவீதமாக இருந்த தொழில்முனைவோர் விகிதம் 2021ம் ஆண்டில் 14.4 சதவீதமாக உயர்ந்தது. இதன் மூலம், இந்தியாவின் வளர்ச்சியில் தொழில்முனைவோரின் பங்கு முக்கியமாக மாறி வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்