மு.க.ஸ்டாலின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொல்ல மறுப்பது ஏன்? – எல்.முருகன் கேள்வி

பெரும்பான்மை மக்கள் கொண்டாடும் பண்டிகைக்கு முதலமைச்சர் பாகுபாடின்றி வாழ்த்து சொல்ல வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்து உள்ளார்.

சென்னையில்
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள மக்களால் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் அனைவருக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துகள். எல்லாம் வல்ல விநாயகக் கடவுள், அனைவருக்கும் நல் ஆயுள், ஆசியைத் தர வேண்டும் ; அனைவருக்கான வளர்ச்சியைத் தர வேண்டும். அனைவரும் இணைந்து 2047 ஆம் ஆண்டுக்குள் தேசம் தழுவிய வளர்ச்சியை எட்டுவோம்.

விநாயகர் சதுர்த்தி
அனைவராலும் கொண்டாடப்படும் பண்டிகையாக உள்ளது. பெரும்பான்மை மக்கள் கொண்டாடும் திருவிழாக்களுக்கு வாழ்த்து சொல்வது அனைவரின் கடமை.

தலைவராக மு.க.ஸ்டாலின் இருக்கும் போது வாழ்த்து சொல்லாவிட்டால் பரவாயில்லை. ஆனால் முதலமைச்சராக இருந்து கொண்டு வாழ்த்து சொல்லாமல் இருப்பது தவறு.

விநாயகர் சதுர்த்தியை மு.க.ஸ்டாலின் கொண்டாடவிட்டாலும் பரவாயில்லை; குறைந்தபட்சம் வாழ்த்துகளை தெரிவித்திருக்க வேண்டும். முதலமைச்சர் பாகுபாடின்றி வாழ்த்து சொல்ல வேண்டும். முதலமைச்சராக இருப்பவர், பிற சமுதாய விழாக்களுக்கு செல்கையில், பெரும்பான்மை மக்களின் விழாக்களுக்கும் தாமாக முன்வந்து வாழ்த்து சொல்ல வேண்டும்.

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு மிகவும் சீரழிந்து விட்டது. யாரும் பாதுகாப்பாக நடமாட முடியவில்லை. காவலர்கள் மீதே தாக்குதல் நடைபெறும் போது சாமானிய மக்களின் நிலை என்ன என்பது கவலைக்குரியதாக உள்ளது. சட்டம் – ஒழுங்கை கவனமாக கையாள வேண்டும்; அதில் மாநில அரசு கவனம் செலுத்த வேண்டும். உள் கட்டமைப்பு திட்டங்கள் நாட்டுக்கு தேவை. சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டத்தில் அரசியல் செய்யக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.