மேட்டூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது.
சேலம் மாவட்டம் மேட்டூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் ஆறு போல் ஓடியது. பல இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு இடையே பயணித்தனர்.
இந்நிலையில் நவப்பட்டி, மாதையன் குட்டை, காவிரி கிராஸ் உள்ளிட்ட பகுதிகளில் 2000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதிகளில் கால்வாய் அமைக்கும் பணி காலதாமதம் ஆவதால் நேற்று முன்தினம் பெய்த மழைநீர் கால்வாயில் காட்டாற்று வெள்ளம் போல சென்றது. இதனால் மாதையன் குட்டை பகுதியில் உள்ள வீடுகளுக்குள் நீர் புகுந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர்.
வீடுகளில் இருந்த அரிசி, மளிகைப் பொருட்கள் வீணாகின. மேலும் வயல்களில் மழைநீர் தேங்கியதால் பருத்தி, கடலை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்தன. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் செல்ல வழி இல்லாமல் தேங்கி நின்றது.
பின்னர் வீடுகளுக்குள்ளும் புகுந்தது. கால்வாய் மேலேயே ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டு இருப்பதாலும் கால்வாயில் மண் அடைத்து இருப்பதாலும் மழைக்காலங்களில் மழை நீர் செல்ல வழி இல்லாமல், குளம் போல தேங்கி விடுகிறது. எனவே கால்வாய் அமைத்து தர வேண்டும் எனக் கூறினர்.